“ஜிப்மரில் நிரப்பவுள்ள 165 செவிலியர் பணியிடங்களில் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு இல்லை” - இந்திய கம்யூ. விமர்சனம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ஜிப்மரில் நிரப்பவுள்ள 165 செவிலியர் பணியிடங்களில் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு இல்லை. 25 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரிக்கு பெற அரசு நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் இன்று வெளியிட்ட அறிக்கையில்: "புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் புதுச்சேரியில் அமைந்திட, மாநில அரசின் சார்பில் நிலம், மின்சாரம், சாலை வசதி போன்ற கட்டமைப்புகள் வழங்கப்பட்டது. இதற்காக புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி மாநில மக்கள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மருத்துவ உதவி பெற்றிடும் நிலையில் உள்ளது.

இந்த ஜிப்மர் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியை சார்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து வந்தது. காலப்போக்கில் ஜிப்மர் நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையாலும் புதுச்சேரி மாநில அரசின் அலட்சியப் போக்கினாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதுச்சேரியைச் சார்ந்தவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜிப்மர் நிர்வாகம் தற்போது 165 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பணியிடங்களில் புதுச்சேரியைச் சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. கடந்த காலங்களில் ஜிப்மர் மருத்துவமனைக்கு தேர்வாகி பணிக்கு வருகின்ற செவிலியர்கள் சில ஆண்டுகளில் மத்திய அரசின் பிற மருத்துவமனைகளுக்கு இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். இதனால் ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து செவிலியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் செவிலியர் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தற்போது ஜிப்மர் நிர்வாகம் தேர்வு செய்ய உள்ள செவிலியர் பணியிடங்களில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். நாட்டிலேயே வேலையற்ற இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலமாக புதுச்சேரி உள்ளது எனவே மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு மத்திய அரசின் நிறுவனங்களில் புதுச்சேரி மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டினை பெற்றிட உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE