4 பல்கலை. துணைவேந்தர் பதவி காலி: பணிகள் பாதிக்கப்படுவதாக ராமதாஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தொடர் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பினாலும், தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உபரிநீரைத் திறக்கும் வடிகாலாகவே, தமிழகத்தை கர்நாடகா பார்க்கிறது.

காவிரி துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் நிர்வாகத்தை, காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த அறிக்கையை ரோகிணி ஆணையம் சமர்ப்பித்தும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும். தொடர்ந்து அரசியல் படுகொலைகள் நடைபெறுகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

தமிழக அரசு-ஆளுநர் மோதலால், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர், கோவை பாரதியார் மற்றும் தமிழ்நாடு கல்வியல் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. இதனால் பல்கலைக்கழகங்களின் பணிகள் முடங்கியுள்ளன.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும். நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE