மின் கட்டண உயர்வை கண்டித்து 25-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்: 21-ம் தேதி நாதக போராட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மின்கட்டண உயர்வு, காவிரி விவகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக, நாம் தமிழர்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மின் கட்டணம்உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. அதை திரும்பப் பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள்கடந்த சில மாதங்களாக கிடைக்காததை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஜூலை 25-ம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அதேபோல், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க காரணமாக இருக்கும் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவின் செயல்பாடும் ஏற்புடையதல்ல. எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் இருந்து தண்ணீரை மத்திய, மாநில அரசுகள் பெற்றுதர வலியுறுத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர், விவசாயிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைக்காக நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி போராட்டமாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு சீர்குலைவு: நாம் தமிழர் கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை,கள்ளச் சாராய விற்பனை, போதைபொருட்களின் புழக்கம், அடக்குமுறைகள் ஆகியவற்றால் சட்டம்ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டம்ஒழுங்கை காக்கத் தவறியதை கண்டித்தும், திமுக அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி,மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதை கண்டித்தும் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE