புதிய மாநகராட்சிகள் உருவாக்கல் உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

By கி.கணேஷ்

சென்னை: புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகளை குறைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நகர்ப்புற உள்ளாட்சி திருத்த சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகையாக இருந்த 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.அதே போல், சென்னையில், தனியார் வளாகம் அல்லது ஒரு தனியார் தெருவின் மிக அருகில் உள்ள இடத்தில் இருந்து 30 மீட்டர் தூரத்துக்குள், வாரியத்தின் கழிவுநீர்ப்பாதை இருக்குமானால், அந்த வளாகத்தின் உரிமையயாளர் அல்லது குடியிருப்பவர், தனியார் தெருவின் உரிமையாளர், கழிவுநீரை வாரியத்தின் கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை மாநகர காவல் சட்டத்தை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE