உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தும், குடியிருப்புகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. முழு கொள்ளளவை எட்டிய குந்தா உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றப்படுகிறது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையின் தீவிரம் காரணமாக ஆறுகளிலும் நீரோட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மசினகுடி - தெப்பக்காடு இடையே மூன்று நாட்களாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கூடலூர் தொரப்பள்ளி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அவசிய தேவைகளுக்காக நடமாட முடியாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
» ‘கோனோகார்பஸ்’ மரங்களை தடை செய்ய எழும் கோரிக்கை - காரணம் என்ன?
» கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பகலிலேயே யானைகள் ஊர்வலம் - மக்கள் அச்சம்
வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 48 நபர்களை தற்காலிக மீட்பு முகாம்களில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேல் கூடலூர் பகுதியில் உள்ள பல குடியிருப்புகளின் சுவர்கள் மற்றும் தரைகளில் திடீரென விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாடுகானி பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு குறித்து கூடலூர் பகுதி மக்கள் கூறும்போது, "மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று காலை முதல் காற்றும் வேகமாக வீசுகிறது. வீடுகளில் விரிசல், வெள்ளம் என அச்சத்தில் இருக்கிறோம். வெள்ளம் வடிய நடவடிக்கை எடுக்கவும், விரிசல் தொடர்பாக புவியியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்” என்றனர்.
கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவலாஞ்சி, தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு, பயணிகளுக்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மழையின் தீவிரம் காரணமாக தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காற்று மழையின் தாக்கம் காரணமாக கூடலூரில் வாழை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. மின்கம்பிகள் மீது மரங்கள் விழுவதால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டிருக்கிறது. உதகை முள்ளிக்கொரை, தமிழகம் சாலைகளில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதடைமந்தன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, "மழை பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறோம். குடியிருப்புகளைச் சுற்றி மழை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி மக்கள், அருகில் உள்ள முகாம்களில் தங்கலாம். மண் சரிவு மற்றும் விரிசல் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்" என்று கூறினர்.
மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக அவலாஞ்சியில் 112 மி.மீ., மழை பதிவானது. மழையளவு விவரங்கள்: உதகை – 30.2 மி.மீ., நடுவட்டம் - 26 மி.மீ., கிளன்மார்கன் - 7 மி.மீ., குந்தா - 22 மி.மீ., எமரால்டு - 36 மி.மீ., அப்பர் பவானி - 68 மி.மீ., கூடலூர் - 31 மி.மீ.,தேவாலா - 53 மி.மீ., பந்தலூர் - 92 மி.மீ., சேரங்கோடு - 84 மி.மீ., கோடநாடு - 6 மி.மீ., கீழ் கோத்தகிரி - 6 மி.மீ., கோத்தகிரி - 1 மி.மீ., செருமுள்ளி - 20 மி.மீ., பாடந்தொரை - 23 மி.மீ., ஓ வேலி – 30 மி.மீ. .
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago