மக்களவைத் தேர்தல் தோல்விக்கு எதிராக ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் வழக்கு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் ஆகியோர் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் என்டிஏ ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியிடம் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடையந்தார்.

இதேபோல அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் மட்டுமே தேர்தல் வழக்கு தொடர முடியும் என்ற நிலையில், கடைசி நாளான இன்று ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் இன்று ஒரே நாளில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்து, தங்களை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ராமநாதபுரத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிட்ட நவாஸ் கனியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளேன். தேர்தல் வழக்குத் தொடர இன்றுதான் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டதால் இன்று வழக்கு தொடர்ந்துள்ளேன். பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என கட்சியின் தொண்டர்கள் நினைக்கின்றனர். நாங்களும் அதைத்தான் கூறி வருகிறோம். ஜனநாயக முறைப்படி தொண்டர்களுக்கான இயக்கமாக, தொண்டர்கள் உருவாக்கிய இயக்கமாக அதிமுக உள்ளது.

அப்படியான இந்த இயக்கம் பிரிந்து கிடக்கிறது. எங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ளும்படி பழனிசாமியிடம் யார் சொன்னது? அவராகவே கேள்வி கேட்டுக்கொண்டு அவராகவே பதில் சொல்வது நல்லதல்ல. இந்த இயக்கத்தின் முடிவு இன்னும் சில காலத்தில் தெரியும். அதிமுகவில் உள்ள அனைத்து மட்டத் தொண்டர்கள், தலைவர்களிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சசிகலாவின் பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள். உச்ச நீதிமன்றம் வரை சென்று காவிரி உரிமையை நிலைநாட்டி சட்டமாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கையில் தான் உள்ளது.

கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இண்டியா கூட்டணியில் தான் திமுகவும் உள்ளது. இந்த கூட்டணியின் பலம் வாய்ந்த சக்தியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என அந்தக் கூட்டணியின் அனைத்து தலைவர்களும் கூறி வருகின்றனர். எனவே, முதல்வர் ஸ்டாலின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு மாதாந்திர அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE