புதுச்சேரி: மக்கள் கஷ்டத்தை எடுத்துச் சொல்ல கோவணத்துடன் மின் கட்டணம் செலுத்தவந்த சமூக ஆர்வலர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இதர மாநிலங்களை விட புதுச்சேரியில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் மக்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர் ஒருவர் கோவணம் கட்டி வந்து மின் கட்டணம் செலுத்தினார்.

புதுச்சேரி உப்பளத்திலுள்ள மின்துறை அலுவலகத்துக்கு சமூக ஆர்வலர் சுத்தம் சுந்தர் ராஜன் கோவணம் கட்டி நாமம் போட்டு இன்று மின்கட்டணம் செலுத்த வந்தார். அவர் வரிசையில் நின்று மின்கட்டணம் செலுத்தினார்.

வரிசையில் நின்றபடி செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் கூறியதாவது: புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மின்துறையை தனியார் மயமாக்கவில்லை என்று சொல்கிறார்களே தவிர மின் கட்டண பில்லில் மறைமுகமாக ஏராளமான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். 5 ஆயிரம் ரூபாய் வாடகை வீட்டில் இருப்பவர்கள் ரூ.3 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

குஜராத், டெல்லி, பஞ்சாப் என பல மாநிலங்களில் மின்கட்டணத்தில் சலுகைகள் உள்ள நிலையில் புதுச்சேரியில் மட்டும் ஏன் இவ்வளவு வரி போடுகிறார்கள் என தெரியவில்லை. மின் இணைப்பு பெற டெபாசிட் கட்டியுள்ளோம். அது எங்கு போனது? அதன் வட்டியே மின்துறைக்கு போதுமே. மின்துறை எப்படி நஷ்டமாகும்? நஷ்டம் எனக் கூறியே மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள்.

இன்னும் உயரப் போவதாகச் சொல்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாளில் மின் கட்டணத்தின் மூலம் மக்களின் கோவணத்தைக் கூட உருவி விடுவார்கள் ஜாக்கிரதை என்பதை தெரிவிக்கவே இப்படி கோவணத்துடன் மின் கட்டணம் செலுத்த வந்தேன். இவ்வாறு சுந்தர் ராஜன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE