ஈரோடு அருகே ஆம்னி பேருந்தில் தீவிபத்து; ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பிய பயணிகள்

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்து ஒன்று ஈரோடு அருகே தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று இரவு (புதன்கிழமை) சென்றுகொண்டிருந்தது. ஓட்டுநர் கார்த்திகேயன் பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் பேருந்தில் பயணித்தவர்களில் சிலர் வரும் வழியில் ஆங்காங்கே இறங்கினர்.

இந்நிலையில், சுமார் 15 பயணிகளுடன் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்திக்கேயன், பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதோடு, உள்ளே இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவர்களை வெளியேற்றியுள்ளார்.

ஓட்டுநரின் இந்த துரித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் எவ்வித சேதாரமும் இன்றி உயிர்தப்பினர். அதேசமயம் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீஸார், தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE