தஞ்சாவூர் அருகே பரிதாபம்: பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் வேன் மோதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர்.

இவர்கள் பல குழுக்களாக பிரிந்து நேற்று காலை தஞ்சாவூர் - திருச்சி புறவழிச் சாலையில், வளப்பக்குடி பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, தஞ்சாவூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இதில், கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த சின்னையன் மகன் முத்துசாமி(60), கார்த்திக் மனைவி மீனா(26), முருகன் மனைவி ராணி(37), ரமேஷ் மனைவி மோகனாம்பாள்(28) ஆகிய 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த செல்வராஜ் மனைவியும், சத்துணவுப் பணியாளருமான தனலட்சுமி(37), கவிராஜ் மனைவி சங்கீதா(21) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தனலட்சுமி உயிரிழந்தார். சங்கீதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, வேன் ஓட்டுநரான கரூரை சேர்ந்த சவுந்தரராஜனை(38) கைது செய்தனர். இந்த சம்பவம் கண்ணுக்குடிபட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ள தாவது:

தஞ்சாவூர் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 5 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சத்தை முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE