ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரர் சிறப்பு வழிபாடு

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் கங்காபிஷேகம் செய்து, தனது காசி யாத்திரையை நேற்று நிறைவு செய்தார்.

நடப்பாண்டு வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் 21-ம் தேதி தொடங்கும் ஸ்ரீவிஜயேந்திரர், செப். 18 வரை ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவர் மணிமண்டபத்தில் விரதத்தைக் கடைப்பிடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் காஞ்சி சங்கர மடத்துக்கு வந்த ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்றனர். நேற்று காலை ராமேசுவரம் கோயிலுக்கு வந்த அவருக்கு இணை ஆணையர் சிவராமகுமார் தலைமையில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கருவறைகளில் சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமேசுவரத்தைப் பொறுத்தவரை அக்னி தீர்த்தம் என்ற பெயரில் கடலே தீர்த்தமாக அமைந்திருக்கிறது. பலதேசத்து மக்களும் இங்கு வந்து இறைவனை வழிபட்டு, நல்ல பலன்களை பெறுகிறார்கள்.

காஞ்சி மகா பெரியவர் 1920-களிலே தேச நன்மைக்காக காந்தியடிகளின் அகிம்சா முறையைப் பின்பற்றி பட்டாடைகளைத் துறந்து, காதி வஸ்திரங்களை ராமேசுவரம் கோயிலில் வந்து உடுத்தினார். ராமநாத சுவாமிக்கு பலமுறை அபிஷேகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஜெயந்திர சரஸ்வதிசுவாமிகளும் ராமநாத சுவாமிகோயிலில் பலமுறை அபிஷேகம்செய்திருக்கிறார். அவர்கள் வழிதொட்டு ஏகாதச ருத்ராபிஷேகம், கங்கா சஹஸ்ரநாம பூஜை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் விரைவில் ராமேசுவரத்தில் கல்விப் பணி தொடங்க உள்ளோம். இவ்வாறு ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார்.

ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகையையொட்டி, ராமநாத சுவாமி கோயிலில் ஒன்றரை மணி நேரம் பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. 2 டிஎஸ்பிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காசி யாத்திரை நிறைவு: ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ராமேசுவரம், தனுஷ்கோடியிலிருந்து புனித தீர்த்தங்களை எடுத்துச்சென்று, கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி கங்கையில் சைகத பரமேஸ்வர லிங்க பிரதிஷ்டை செய்தார். தொடர்ந்து, கங்கையிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, ஆஷாட ஏகாதசி நாளான நேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். இதன் மூலம் அவர் பழமையான வழக்கத்தை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE