காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்: கரூர் கோர்ட் உத்தரவு

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் பிருத்விராஜை, ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும், அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுப்பதற்காக கடந்த ஏப்.6-ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததால் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு அசல் ஆவணம் தொலைந்து விட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட ‘நான் ட்ரேஷபில்’ சிஎஸ்ஆர் நகலை அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த சொத்தானது கடந்த மே 10ம் தேதி சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது.

அதன் பிறகு ஷோபனாவின் தந்தை பிரகாஷ் போலியான ‘நான் ட்ரேஷபில்’ சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனு அளித்தார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் அப்போதைய வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் ‘நான் ட்ரேஷபில்’ சான்றிதழ் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே கரூர் மாவ ட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராக பணியாற்றியவர்.

இதையடுத்து கரூர் நகர காவல் நிலையத்தில் போலியான சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு மேற்கொண்டதாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த மாதம் 14ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 5, 7, 11ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் பலரை சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்தும் விசாரணை நடத்தினர்.

நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று கைது செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது பத்திரப் பதிவுக்கு செய்வதற்கு காரணமான ‘நான் ட்ரேஷபில்’ சான்றிதழ் பெறப்பட்டப்போது வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்து தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு பணியிட மாற்றட்பட்டு தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கும் பிருத்விராஜை நேற்றிரவு 12 மணிக்கு சென்னையில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

அங்கிருந்து கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு இன்று (ஜூலை 17ம் தேதி) காலை 6.30 மணிக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி பரத்குமார் முன் மாலை 4.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். ஆய்வாளர் பிருத்விராஜை ஜூலை 31-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறைக்கு காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் அழைத்து செல்லப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE