கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டதை அடுத்து அவர் இன்று (ஜூலை 17ம் தேதி) காலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 12-ம் தேதி மற்றும் ஜூன் 30-ம் தேதி என இரு முறை முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் இரு மனுக்களும் தள்ளுப்படி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் விஜயபாஸ்கர் தலைமறைவானார்.
» ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிசிஐடி அலுவலகத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் அளித்த புகாரில் வாங்கல் போலீஸார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கடந்த 22ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மற்றும் அவரது வீடு, நிறுவனங்களில் கடந்த 5, 7, 11ம் தேதிகளில் சிபிசிஐடி போலீஸார் சோதனை செய்தனர். மேலும் விஜயபாஸ்கர் மனைவி விஜயலட்சுமியிடமும் விசாரணை நடத்தினர். மேலும் ஏராளமானோரிடம் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
விஜயபாஸ்கர், அவரது சகோதரர் ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு கடந்த 15-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கின் முக்கிய நபரான பிரவீண் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கேரளா மாநிலம் திருச்சூரில் நேற்று காலை 6 மணிக்கு கைது செய்து கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2.30 மணிக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அங்கு அதிகளவில் அதிமுகவினர் திரண்டதால் போலீஸார் பேரிகார்டுகள் வைத்து சிபிசிஐடி அலுவலகம் உள்ள சாலையில் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
மதியம் 2.30 மணி முதல் தொடர்ந்து விஜயபாஸ்கரிடம் ஆறரை மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடியினர் விசாரணை நடத்திய நிலையில் இரவு 9.15 மணிக்கு மேல் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கரையும், பிரவீணையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை முடிந்து இரவு 9.45 மணிக்கு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயபாஸ்கர் செய்தியாளர்களை பார்த்து, “அரசியல் பழி வாங்கும் வழக்கு, சட்ட ரீதியாக சந்திப்பேன்” என்றார். இதையடுத்து ஆவணங்களில் கையெழுத்து பெறுவதற்காக மீண்டும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை அடுத்து இரவு நீதிமன்றத்தில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டு நீதிமன்ற நுழைவாயில் கதவு மூடப்பட்டது. நீதிமன்றம் முன்பு இரவு 9 மணி முதல் ஏராளமான அதிமுகவினர் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
விஜயபாஸ்கர், பிரவீண் இருவரும் போலீஸ் வாகனத்தில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளகத்திற்கு நேற்றிரவு 12.15 மணிக்கு அழைத்து வரப்பட்டு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று (ஜூலை 17-ம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், பிரவீண் வெளியே அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டு விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீண் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago