டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச் சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரை சந்தித்து மனு அளித்தன. சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்த சூழலில், 5 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவிநேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம், பல்வேறு திட்ட செயல்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர். ‘‘பிரதமரை சந்தித்து, தமிழக மக்களின் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று எக்ஸ் வலைதள பக்கத்தில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவையும் ஆளுநர் சந்தித்தார். விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து, தமிழக சட்டம் - ஒழுங்கு, பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. அவர் 19-ம் தேதி சென்னை திரும்புவார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE