ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 21,000 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், அருவி, ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்காவிரி ஆற்றில் கடந்த 14-ம் தேதிகாலை விநாடிக்கு 4,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று இரவு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து, ஆற்றில் பரிசல் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை6 மணிக்கு விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகலில் 20 ஆயிரம் கனஅடியாகவும், மாலையில் 21 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்தது.

அருவியில் குளிக்க தடை: இதனால், பிரதான அருவி, சினிஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றிலும் தண்ணீர் வேகமெடுத்து ஓடுகிறது. இதனால், அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும், காவிரி ஆற்றில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தருமபுரிமாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடகமாநில அணைகளில் இருந்துஉபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியைக் கடந்து, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அப்போது, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.எனவே, ஆலம்பாடி முதல் ஒகேனக்கல் பிரதான அருவி வரை ஆற்றிலும், அருவிகளில் குளிக்கவும், ஆற்றுப்படுகையில் இறங்கவும் தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

மேட்டூரில் 16,557 கனஅடி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 4,047 கனஅடியாகவும், நேற்று காலை 8 மணிக்கு 5,054கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 16,577 கனஅடியாக அதிகரித்தது. காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் திறப்பைவிட, நீர்வரத்து அதிகம் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது, அணை நீர்மட்டம் 43.22 அடியில் இருந்து 44.62 அடியாகவும், நீர்இருப்பு 13.08 டிஎம்சியில் இருந்து 14.59 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE