கோவை மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு பாதிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை பெய்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடீஸ் எஜிப்டை’ வகை கொசுக்கள் மழைக் காலங்கள், குளிர் காலங்களில் இனப்பெருக்கம் அடைகின்றன. இந்த வகை கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது. மழைக்காலத்தில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரிக்கிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக கடந்த இரு மாதங்களில் கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது.

இந்நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர் அருணா கூறியதாவது: “கோவை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஜூன் மாதத்தில் 34 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் இதுவரை 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பருவமழை காலங்களில் தேங்கியுள்ள நீரில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புள்ளது. வீட்டை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல வீடுகளை சுற்றியுள்ள டயர், ஆட்டுக்கல், டின்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும்.

இவற்றை அப்புறப்படுத்துவதுடன் மழை காலங்களில் குப்புற கவிழ்த்து வைத்திடலாம். அல்லது மழை நீர் புகாதவாறு பழைய பொருட்களை மூட்டைகளாக கட்டி வைக்கலாம். பொதுவாக வீடு என்பது டெங்கு கொசு உற்பத்தியாகும் இடமாக இருக்க கூடாது. அந்த வகையில் சுகாதார துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு கொசு இனப்பெருக்கம் செய்யும் வகையில், பழைய பொருட்களை அகற்றாமல் உள்ள வீடுகளுக்கு சுகாதார துறை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.

சுமார் 50 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஊரக, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஏற்கெனவே டெங்கு காய்ச்சல் பாதித்த இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட அளவில் டெங்கு அதிகம் பாதித்த சுமார் 90 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கொசு ஒழிப்புப் பணி நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE