‘தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம்!’

By இல.ராஜகோபால்

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் சுந்தரராமன் கூறும்போது, “கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில் துறை மந்த நிலையில் உள்ளது. நூற்பாலைகள் மற்றும் விசைத்தறிகள் பல மூடப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். இத்தகைய சூழலில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். தமிழக அரசு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறும்போது, “தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தர தொழில்முனைவோர் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்வாரியம், அமைச்சர்கள் மற்றும் முதல்வரிடம் நேரிலும், போராட்டங்கள் மூலமாகவும் தெரியப்படுத்தினோம். கோரிக்கை பரிசீலிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பின் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் எம்எஸ்எம்இ தொழில்கள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்றார்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் கூறும் போது, “இன்று தொழில்துறையில் காணப்படும் பிரச்சினைகளில் முக்கியமானதாக மின்கட்டண உயர்வு கருதப்படுகிறது. ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும்” என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறும்போது, “ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலை கட்டண உயர்வு, சூரியஒளி மின்உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணம் விதிப்பு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி வரும் நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நூற்பாலைகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது”என்றார்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர், ரகுநாதன் கூறும் போது, “பண மதிப்பிழப்பு, கரோனா நோய்தொற்று பாதிப்பில் இருந்து குறு, சிறு தொழில் நிறுவனங்கள் முழுமையாக மீண்டு வராத சூழலில் மின்கட்டண உயர்வு நெருக்கடியை அதிகரிக்கும்” என்றார். கோவை தொழில் அமைப்புகள் கூட்டமைப்பின் (போசியா) ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளிவேல் ஆகியோர் கூறும் போது, “தமிழ்நாடு மின்வாரியம் குறு, சிறு தொழில்களை முடக்கும், அழிக்கும் நோக்கத்தில் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

ஏற்கெனவே நிலை கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தியுள்ள நிலையில் மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு எவ்வளவு? - 2.19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகர்வோர்களுக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றிற்கு 20 காசுகள் உயரும். விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 25 காசுகள் உயரும்.

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிக குறைந்த அளவில் யூனிட் ஒன்றிற்கு 35 காசுகள் உயரும். 22.36 லட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.15 உயரும். உயர் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டிற்கு பைசா 35 உயரும். உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 40 பைசா உயரும். நிலையான கட்டணங்கள் (Fixed Charges) கிலோவாட் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.3 முதல் ரூ.27 வரை உயரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE