மாற்றுப் பணியால் மன உளைச்சலில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் - இது 8 வருட வேதனை!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு 8 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாற்றுப் பணி கூடுதலாக வழங்கப்படுவதால் தாங்கள் மன உளச்சலுக்கு ஆளாவதாக கால்நடைப் பராமரிப்பு உதவியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களாக தமிழக முழுவதும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டுக்குப் பிறகு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தற்போது உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர்களையே காலிப் பணியிடங்களில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மாற்றுப் பணி என்ற பெயரில் பணியமர்த்துகின்றனர். இதனால், பணிச்சுமை அதிகரித்து பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம் கோட்டங்களில் 96 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. சமயநல்லூர், சேடபட்டி, திருமங்கலம், மேலூர் ஆகிய 4 இடங்களில் கால்நடை பெரு மருத்துவமனைகளும் தல்லா குளத்தில் உள்ள ஒரு பன்முக மருத்துவமனையும் உள்ளன. மாவட்டத்தில் மருந்தகங்கள், மருத்துவமனைகளில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். 2015ம் ஆண்டு கணக்கெடுப்படி மாவட்டத்தில் 42 காலிப்பணியிடங்கள் இருந்தது. தற்போது அதைவிட கூடுதல் காலிப் பணியிடங்கள் உருவாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த நிலையில், அதன்பிறகு அதற்கான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் மண்டல இணை இயக்குநர் பதவியில் உள்ளவர்கள் பணி ஓய்வுபெறும் காலம் நெருங்கி வந்த காரணத்தினால் அவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. பல மாவட்டங்களில் மண்டல இணை இயக்குனர் பதவிகள் காலியாக உள்ள நிலையில் கூடுதல் பொறுப்பு வகித்து வரும் துணை இயக்குநர்களும் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அக்கறை காட்டுவதில்லை.

அதிகாரிகள் இப்படி தங்களுக்கான பொறுப்புகளை தட்டிக்கழிப்பதால் இருக்கின்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை கொண்டு காலிப் பணியிடங்களை சமாளிக்க ஒவ்வொரு கால்நடை பராமரிப்பு உதவியாளருக்கும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மாற்றுப் பணி வழங்கியுள்ளனர். கால்நடை மருத்துவர்கள், கால்நடை துறை அதிகாரிகள், இதுபோல் காலிப் பணியிடங்களில் கூடுதல் பொறுப்பாக பணிபுரிகின்ற போது அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பயணப்படி மற்றும் கூடுதல் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கோ மாற்றுப் பணி என்ற பெயரில் கூடுதல் ஊதியம், பயணப்படி இல்லாத கூடுதல் பணி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்ச ஊதியம் பெறும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு மாற்றுப் பணி என்ற பெயரில் எந்தவித பணப் பலன்களுமே இல்லாத கூடுதல் பணி வழங்கப்படுகின்றது. கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு மிக தொலைவில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி வழங்கப்படுவதால் பேருந்து போக்குவரத்து செலவு மட்டுமே மாதத்துக்கு சுமார் ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரைக்கும் செலவாகிறது.

வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பஸ் செலவுக்கே செலவழித்தால் பணிபுரிந்து என்ன பயன்? மேலும், தற்போது கோமாரி நோய் தடுப்பூசி, புருசெல்லா போன்ற தடுப்பூசி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நிரந்தர பணியிடத்தில் தடுப்பூசி பணிகளை முடித்து மாற்றுப் பணிபுரியும் இடத்திற்கும் தடுப்பூசி பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதிகாலையிலேயே தடுப்பூசி வழங்கும் மாவட்ட தலைமை நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசிகளை பெற்று முகாம் நடக்கும் இடங்களுக்குச் சென்று கொடுக்க வேண்டியதுள்ளது.

பெண் கால்நடை பராமரிப்பு உதவியாளராக இருந்தால் அதிகாலை வேளையில் தடுப்பூசி பணிக்கு செல்லும்போது ஆட்டோ அல்லது கணவரின் துணையுடன் இருசக்கர வாகனத்தில் தான் பணியிடத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிகாலை எழுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால் சரியான நேரத்தில் சாப்பாடுகூட சாப்பிட முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களின் கஷ்டங்கள் எதையுமே கண்டுகொள்ளாத கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் அமைச்சரும் காலி பணியிடங்களில் பணியாளர்களை பணியமர்த்தவும் நடவடிக்கை எடுப்பதில்லை” என்றனர்.

மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நந்தகோபலிடம் இது குறித்து கேட்டபோது, "காலிப் பணியிடங்களை நிரப்புவது அரசின் முடிவு. விரைவில் இந்த நிலை மாறும்" என்று மட்டும் சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE