திண்டிவனத்தில் சாலையை சீரமைக்காத நகராட்சியைக் கண்டித்து அதிமுக எம்எல்ஏ தர்ணா!

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: சாலைகளை சீரமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எம்.எல்.ஏ அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுகவினர் ஜல்லி, எம் சாண்ட் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் நகரத்தில் காந்தி வீதி, மாடவீதி, நேரு வீதி, மசூதி தெரு உள்ளிட்ட ஏழு சாலைகளில் தார் சாலை அமைக்காமல் ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். பாதாளட் சாக்கடை திட்டமும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாலும், குப்பைகள் ஆங்காங்கே எரிக்கப்படுவதால் நகர பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். நகரத்தில் உடனடியாக தார் சாலைகள் அமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,

குப்பைகளை நகரின் ஒதுக்குப்புறமாக கொண்டு சென்று அழிக்க வேண்டும் என வலியுறுத்தி திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ-வான அர்ஜுனன் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்தார். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காததால், எம்எல்ஏ-வான அர்ஜுனன் இன்று காந்தி வீதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்து முன்னாள் நகர் மன்றத் தலைவர் கே.வி.என். வெங்கடேசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சென்று திண்டிவனம் நகராட்சி அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, சாலைகளை சீரமைக்க வேண்டும், பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அர்ஜுனன் உள்ளிட்ட அதிமுகவினர் ஜல்லி, எம் சாண்ட் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நகராட்சி மேலாளர் நெடுமாறன், நெடுஞ்சாலைத் துறையின் உதவி கோட்டப்பொறியாளர் கவிதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தர்ணா போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுனன் கூறும்போது, "கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை 2 ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டும். ஆனால், 4 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இத்திட்டம் முழுமை பெறவில்லை. பலமுறை ஆர்பாட்டம் செய்தும் இத்திட்டத்தை முழுமையாக முடிக்கவில்லை. மேலும், சாலைகளை 4 மாதத்திற்கு முன் பெயர்த்தனர். இதனால் வாகனங்கள் கடந்த பின் அந்த வீதியே புகைமண்டலமாகிறது. மழை பெய்தால் சேறும் சகதியுமாகிறது.

இது குறித்து நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத் துறைக்கு சீரமைக்க பணம் கொடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இப்போது 10 நாட்களில் இதனை முடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். 10 நாட்களுக்குள் சீரமைக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என எம்.எல்.ஏ அர்ஜுனன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE