அரசு கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்க ‘மேப்பிங்’ முறை: மதுரை மாநகராட்சியில் விரைவில் அமல்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மீதான சொத்து வரி வசூலை எளிமையாக்க, அனைத்து அரசு கட்டிடங்களையும் கணக்கெடுத்து ‘மேப்பிங்’ முறையில் வரிவசூல் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, பிரதான வருவாயாக இருக்கிறது. குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அரசுக் கட்டிடங்கள் என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் சொத்து வரி செலுத்தி வருகிறார்கள். ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படும் என்றாலும் வரி செலுத்துவோர் வசதிக்காக ஏப்ரல் 1-ம் தேதியே இரண்டு தவணைகளுக்கும் சேர்த்து ஒரு ஆண்டுக்கான வரியை ஒட்டுமொத்தமாக ஆன்லைனில் ஏற்றிவிடுவார்கள். இதை மொத்தமாகவும், இரு தவணைகளாகவும் வரி செலுத்துவோர் செலுத்தலாம்.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் வந்தபிறகு, வரியை நிலுவையில்லாமல் வசூல் செய்வதற்கு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சொத்து வரி நிர்ணயம் செய்யப்படாத கட்டிடங்களை அடையாளம் கண்டு, அந்த கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்து, மாநகராட்சி வருவாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாத கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பது, சொத்து வரி செலுத்தாத பெரும் நிறுவனங்களிடம் கறாராக பேசி வரி வசூல் செய்வது போன்ற நடவடிக்கைகளால் தற்போது மாநகராட்சி நிதிபற்றாக்கறை சீரமைக்கப்பட்டு ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது.

இருந்தபோதும் அரசு கட்டிடங்களுக்கான சொத்து வரி பாக்கியை வசூல் செய்வதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. இதைப் போக்க தற்போது தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, மாநகராட்சிகளில் அரசு கட்டிடங்களை கணக்கெடுத்து அதனை ஒரு குடையின் கீழ் ‘மேப்பிங்’ செய்து நிலுவையில்லாமல் சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், “மதுரை மாநகராட்சியில் அரசு அலுவலக கட்டிடங்களுக்கும் நீண்ட நாள் வரி பாக்கி உள்ளது. அதை வசூல் செய்வது சிரமமாக உள்ளது. அந்த கட்டிடங்களுக்கான பொறுப்பு அதிகாரிகளை அனுகும்போது, அவர்கள் நிதி ஒதுக்கீடு வந்தால் தருவதாக சொல்கிறார்கள்.

பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிடம் காட்டும் கறாரை, அவர்களிடம் காட்ட முடியவில்லை. அதனால், தற்போது 100 வார்டுகளிலும் உள்ள அரசுத் துறை கட்டிடங்களை கணக்கெடுத்து அவற்றை அந்தத் துறைகளின் மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் கீழ் கொண்டு வருவதற்கான ‘மேப்பிங்’ பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அரசு துறை அதிகாரியின் கீழ், அந்தத் துறைகளின் கிளை நிர்வாக அலுவலகங்கள் அனைத்தும் கொண்டு வரப்படும். உதாரணமாக நெடுஞ்சாலைத்துறையில், கட்டுமானம், பராமரிப்பு, திட்டம் வடிவமைப்பு மற்றும் ஆய்வு, தேசிய நெடுஞ்சாலை போன்ற பல பிரிவு கட்டிடங்கள் உள்ளன.

இந்த கட்டிடங்களை நெடுஞ்சாலைத் துறை மாவட்ட அதிகாரியின் கீழ் கொண்டு வந்து அவரது பெயரிலே இந்த அனைத்து கட்டிடங்களுக்கான சொத்து வரி விதிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், அந்த அதிகாரி அந்த கட்டிடங்களுக்கான சொத்துவரியை தாமதம் செய்யாமல் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பு, சொத்து வரி நோட்டீஸ் சம்பந்தப்பட்ட அலுவலக அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். மாநகராட்சி அலுவலர்கள், அவர்களிடம் சென்று அந்த நிலுவை வரியை நினைவுப்படுத்துவார்கள். அவர்கள், சென்னையில் உள்ள அவர்களது தலைமை அதிகாரிக்கு கடிதம் அனுப்பி, நிதி ஒதுக்கீடு கோருவார்கள்.

அதற்கான ஒப்புதல் கிடைத்ததும், சொத்து வரி நோட்டீஸை கருவூலத்துக்கு அனுப்பி மாநகராட்சிக்கு அந்த பணத்தை கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள்.ஆனால், தற்போது இந்த ‘மேப்பிங்’ நடவடிக்கையின் மூலம் அரசு துறை அதிகாரிகள் பெயரை ஆன்லைனில் தட்டியதும், அவரது பொறுப்பில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களும் பட்டியலிடப்பட்டு, அவர்கள் கட்ட வேண்டிய சொத்த வரியும் வந்துவிடும். இப்பணிகள் முடிந்தபிறகு அடுத்த 2024-2025 நிதி ஆண்டு முதல் இந்த அடிப்படையில் அரசு கட்டிடங்கள் மீதான சொத்து வரி வசூலிக்கப்படும்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE