“இதென்ன தமிழ்நாடா? இல்லை உத்தரப் பிரதேசமா?” - நாதக நிர்வாகி படுகொலைக்கு சீமான் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப் பிரதேசமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஈவிரக்கமற்ற இக்கொடுஞ்செயலை நிகழ்த்திட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் அவரின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது? என்பதற்கு பாலசுப்ரமணியனின் படுகொலையும் ஒரு கொடும் சாட்சியாகும். எவரையும் கூலிப்படையினரைக் கொண்டு எளிதாக வெட்டிச் சாய்த்து விடலாமென்றால், எங்கு இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ன செய்கிறது காவல்துறையும், உளவுத்துறையும்? இதுதான் மாநிலத்தைக் கட்டிக் காக்கும் லட்சணமா? வெட்கக்கேடு!

இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்கப் போகிறோம்? இறந்தவர்களின் உடலுக்குப் பூ போடுவதற்கா காவல்துறை? அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப் பிரதேசமா?

எங்குப் பார்த்தாலும் வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், சாதிய மோதல்கள், போதைப் பொருட்களின் புழக்கம், ரௌடிகளின் அட்டூழியம், கூலிப்படைக் கலாச்சாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழ்நாட்டின் நிலை மிக மிக மோசமாக இருக்கிறது. குற்றங்கள் நடந்தேறியப் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதுமா அரசின் வேலை?

குற்றங்களே நிகழாத ஒரு சமூகத்தைப் படைத்து, சட்டத்தின் ஆட்சியை முழுமையாக நிலைநிறுத்துவதுதானே அரசின் தலையாயக் கடமையும், பொறுப்பும்! அதனைச் செய்ய தவறிய அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன? ஏற்கனவே, கன்னியாகுமரியில் சேவியர்குமாரை இதேபோல ஒரு படுகொலையால் இழந்தேன். இப்போது பாலசுப்ரமணியனையும் இழந்து நிற்கிறேன்.

பாலசுப்ரமணியனைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளையும், அதன் பின்புலத்தில் இருந்து இயக்கியவர்களையுமென மொத்தக் குற்றவாளிகளையும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, விரைந்து கைதுசெய்ய வேண்டும்; கைதுசெய்து, அக்கொலையாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கிறேன்.

இத்தோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து இக்கொடுந்துயரில் பங்கெடுக்கிறேன். பாலசுப்ரமணியனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்