கனமழையால் நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால் இன்று (ஜூலை 16) காலையில் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 15-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடி நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். 97 அடியை கடந்தால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக, பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும்.

நீர் நிரம்பிக் காணப்படும் பில்லூர் அணை

அதன்படி, கனமழையால் இன்று பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்தவுடன், அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் இன்று காலை திறந்து விடப்பட்டது. முதலில் விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. சில மணி நேரத்தில், இது விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE