முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: ஊரகப் பகுதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் பயன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ‘‘பசி, நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை என தமிழக மாணவர்கள் படிப்பதற்கு எது தடையாக வந்தாலும் அதை உடைப்பதுதான் எங்கள் முதல் பணி’’ என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 2.50 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்’ என்று கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர், ‘‘உணவு சுவையாக இருக்கிறதா?’’ என்று கேட்டறிந்தார். ‘‘தினமும் நேரம் தவறாமல் காலை உணவு சாப்பிட வேண்டும்’’ என்றும் அறிவுரை வழங்கினார்.

இத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான நேற்று முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்க விழாவில் முதல்வர் பேசியதாவது: ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதன் மூலம், தினமும் 20.73 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான, சுவையான காலை உணவை சாப்பிடுகின்றனர். இத்திட்டம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம் பிக்கையை அளிக்கிறது. பெற்றோரின் பொரு ளாதார சுமையை குறைக்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இடைநிற்றலை குறைக்கிறது.

நாள்தோறும் மக்கள் நல திட்டங்கள், எதிர்கால முன்னேற்றத்துக்கான செயல்பாடுகள் என இந்த அரசு தொடர்ந்து இயங்கி வருகிறது. எனவே, பொய் செய்திகள் மூலம் தவறான தகவல்களை பரப்பி, அதில் குளிர்காயலாம் என்று நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் திட்டம் ஒருபோதும் நடக்காது.

குறிப்பாக, காலை உணவு திட்டம் இந்த அரசுக்கு நீடித்த புகழை தேடித்தந்துள்ளது. இத்திட்டத்தை தமிழக அரசு தொடங்கிய பிறகு, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி, கனடா போன்ற நாடுகளிலும் இதுபோன்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், எந்த ஊரிலும், எந்த பள்ளியிலும் உணவின் தரம் ஒருதுளி கூட குறைய கூடாது. உங்கள் குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடுபோல, சிறப்பு கவனம் எடுத்து செயல்படுங்கள்.

அரசியலுக்காக, அவசர நிலை பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு இப்போது தொடர்ந்து பேசுகிறது. ஆனால், அவசர நிலை காலத்தில் ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாராக இருக்கிறதா?

நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் தற்போது கேள்வி கேட்கிறது. மாணவர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். நீட் வேண்டாம் என பல முதல்வர்கள், தேசிய தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தின் வழியில் ஒட்டுமொத்த இந்தியாவும் நீட்தேர்வை எதிர்க்கிறது.

தமிழக மாணவர்கள் படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்பதே அரசின் கருத்து. அது பசியோ, நீட் தேர்வோ, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையோ எதுவாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அதை உடைப்பதுதான் எங்கள் முதல் பணி.

தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அந்த சொத்தை தமிழக மாணவர்கள் பெற்றாக வேண்டும். நீங்கள் உயர, உங்கள் வீடும் உயரும், இந்த நாடும் உயரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சமூகநலத் துறை செயலர் ஜெய முரளிதரன், பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன், மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷினி, முதல்வரின் காலை உணவு திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத், திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர், எம்.பி., எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘பசியை போக்கிய மனநிறைவு’ - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதும், தமிழகம் முழுவதும் எத்தனை குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது என்பதை, முதல்வரின் தகவல் பலகை வழியாக கண்காணித்து மாணவர்களின் பசிபோக்கிய மனநிறைவு அடைந்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, கீழச்சேரி அடுத்த மப்பேடு கூட்டு சாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம் கோட்டம்) சார்பில் ரூ.3.81 கோடியில் 8 புறநகர் பேருந்துகள், 2 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகள் என, 10 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின், கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்