போலீஸாரின் பிடியில் இருந்து தப்பினால் சுட்டுதான் பிடிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி கருத்து

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: போலீஸாரின் பிடியில் இருந்து தப்பினால் சுட்டுதான் பிடிக்க முடியும் என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: விக்கிரவாண்டி தொகுதிஇடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவும் பணம் கொடுக்கவில்லை, பாமகவும் பணம் கொடுக்கவில்லை என்கிறார்கள். அதிமுகவின் வாக்குகள் தங்கள் கட்சிக்கு கிடைக்கும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் நினைத்திருந்தார். அது நடக்கவில்லை.

இது, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த வெற்றியாகும். திராவிட இயக்கத்தை தமிழகத்தில் வேரூன்ற செய்தவர் ஸ்டாலின். ஆகையால்தான் அதிமுகவின் வாக்குகள் திமுகவுக்கு கிடைத்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயன்ற திருவேங்கடத்தை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீஸாரிடமிருந்து தப்பி செல்லும்போது சுட்டுதான் பிடிக்க முடியும்.ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினால், அதையும் விசாரிப்பதற்கு முதல்வர் தயாராக உள்ளார். மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு எதிரிகள் அல்ல. இந்த வழக்கில் ஏதேனும் சதி நடந்திருந்தால் அது புலனாய்வில் தான் தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE