‘144 தடை உத்தரவு இருப்பதால் தூத்துக்குடி செல்லவில்லை’: முதல்வர் பதில் சரியானதா?

By மு.அப்துல் முத்தலீஃப்

சென்னையில் செய்தியாளர்கள் தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பியபோது 144 தடை உத்தரவு இருப்பதால் செல்லவில்லை என்கிற ரீதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. அவரது கூற்று சரியா? என்பது பற்றிய ஒரு அலசல்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பேரணி தடையை மீறி நடந்ததில் ஆட்சியர் அலுவலகம் அருகே கலவரம் மூண்டது. அதை ஒட்டி நடந்த துப்பாக்கி சூட்டில் அரசு கணக்குப்படி இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

தூத்துக்குடியில் ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் நடந்தது போல் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ஆனால் அந்த கொந்தளிப்பான மனநிலையில் உள்ள மக்களை அமைதிப்படுத்தும் முயற்சியில் அமைச்சர்கள் இதுவரை ஈடுபடவில்லை என்பதே அனைவரின் குற்றச்சாட்டாக உள்ளது. முதல்வர் சமூக விரோத சக்திகள் என்று கூறி தற்காப்புக்காக வேறு என்ன செய்ய முடியும் என்று பேட்டி அளிக்கிறார்.

அமைச்சர் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு தவிர்க்க முடியாத ஒன்று என்று பேட்டி அளிக்கிறார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வருடத்தில் ஒரு சம்பவம் தானே நடந்துள்ளது அடிக்கடி நடப்பது போல் பிரச்சினையை பெரிதாக்குகிறீர்கள் என்கிற ரீதியில் பதிலளித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைதியாக இருந்திருந்தால் துப்பாக்கி சூடு நடந்திருக்காது என்று பேட்டி அளித்துள்ளார்.

சம்பவத்தின் தன்மை அறியாமல் வழக்கம் போல் பேட்டி அளிப்பதும் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு போடுவதும் பிரச்சினையை மேலும் சூடாக்கி வருகிறது. துப்பாக்கி சூடு நடந்ததிலிருந்து மூன்று நாட்கள் துறை அமைச்சராக இருக்கக்கூடிய முதல்வர் ஊடகங்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.

நேற்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் அறையை முற்றுகையிட்டவுடன் தன்னிலை விளக்கம் அளிக்க உடனடியாக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் செய்தியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களை காண முதல்வர் என்ற முறையில் நீங்கள் ஏன் இதுவரை தூத்துக்குடி செல்லவில்லை? என்று கேட்டபோது, நாங்கள் தூத்துக்குடி செல்லவில்லை என்கிற ஸ்டாலின் குற்றச்சாட்டு தவறானது, நேற்றுக்கூட ஸ்டாலின் போய் சந்தித்தார்.

அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும், அங்கு அமைதி நிலவ வேண்டும் என்று தெரிவித்தார். அதாவது 144 தடை உத்தரவு உள்ளதால் அதை மீறக்கூடாது என்பதால் போகவில்லை என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உள்ளது.

அது போன்ற நடைமுறை உள்ளதா? 144 தடை உத்தரவு முதல்வருக்கும் உண்டா?, என மூத்த வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

144 தடை உத்தரவு முதல்வரை கட்டுப்படுத்துமா?

அது தவறான வாதம், அவரை கட்டுப்படுத்தாது. சட்டத்தை போடும் இடத்தில் இருப்பவர் முதல்வர். 144 தடை உத்தரவை போடுவதே அவர்தானே? 144 போட்டால் 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்றுகூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாட கூடாது என்கிறார்கள். அப்படியானால் 4 போலீஸுக்கு மேல் அங்கு நடமாடாமல் இருப்பார்களா? அதை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் போலீஸார் தானே? நூற்றுக்கணக்கில் போலீஸார் அங்கு போகிறார்கள் அல்லவா?

அதேபோல் காவல்துறைக்கு எப்படி இது பொருந்தாதோ காவல்துறையை இயக்குகிற, அந்த துறை அமைச்சராக உள்ள முதல்வரையும் இது கட்டுப்படுத்தாது. அவரே 144-ஐ போட்டுவிட்டு அவரே நான் சட்டத்தை மதித்து அங்கு போக முடியாது என்று கூறுவது பொருத்தமில்லாத ஒன்று.” என்று தெரிவித்தார்.

இது குறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்க நிர்வாகி சமூக ஆர்வலர் சிவ இளங்கோவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

144 இருக்கும் போது முதல்வர் அங்கு செல்லக்கூடாதா?

144 இருக்கும் போது 4 போலீஸுக்கு மேல் போகக்கூடாது என்று சொல்வாரா முதல்வர். அபத்தமாக இருக்கிறது.

ஆட்சியர் போகிறார் அமைச்சர் போகக்கூடாதா?

144 என்பது அசாதாரண சூழல் பதற்றமான சூழல் உள்ளதால் மேலும் பதற்றமாக கூடாது, 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பதற்காக போடுகிறார்கள். இது பொதுமக்களுக்கான உத்தரவு. அரசாங்கம் போடும் உத்தரவு. அங்கு பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்படுவார்கள். அவர் சொல்வதைப் பார்த்தால் 4 போலீஸாருக்கு மேல் அங்கு போகக்கூடாது என்று எடுத்துக்கொள்வதா?

இது போன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுவது வெட்கப்படக்கூடிய ஒரு பதிலாகத்தான் பார்க்கிறேன். அப்படியே சட்டத்தை மதித்து தான் நடக்கிறோம் என்று அபத்தமான பதிலை முதல்வர் சொற்படி ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்வோம், அப்படியானால் முதல்வர் போகும் சில மணி நேரங்களுக்கு 144 தடையை தளர்த்த வேண்டியது தானே. ஆட்சியர் தான் உத்தரவிடுகிறார், ஆட்சியர் இவருக்கு கீழ் வருபவர் தானே.

என்ன நடக்கிறது, யார் முதல்வராக இருக்கிறார்கள், தனது அதிகாரம் என்ன என்பது கூட தெரியாத ஒரு முதல்வர் இருக்கிறார். தொலைக்காட்சியை பார்த்துத்தான் தெரிந்துக்கொண்டேன் என்று ஒரு மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுவது அவமானப்பட வேண்டிய ஒன்று. அவருக்கு உளவுத்துறை உண்டு, ஒரு சின்ன ஊசி விழுந்தால் கூட அவருக்கு ரிப்போர்ட் போடுவார்கள். ஆகவே என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தெரியவில்லை.

144 காரணம் இல்லை என்றால் ஏன் தயங்குகிறார்?

மக்கள் புறக்கணிப்பார்கள், மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்கிற பயம் காரணமாக இருக்கலாம். கொந்தளிப்பான மனநிலையில் உள்ள பொதுமக்களை எதிர்கொள்வதை தவிர்ப்பதற்காக கூட போகாமல் இருக்கலாம்.

தூத்துக்குடியில் அவரை அழைத்துச்சென்று பொதுமக்களை சந்திக்க வைக்க அவரது கட்சியிலேயே ஒரு மாவட்ட செயலாளரோ, நிர்வாகியோ, எம்பி எம்.எல்.ஏக்களோ இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்