‘தஞ்சை தமிழ் பல்கலை.யில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்தவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது’

By கி.மகாராஜன் 


மதுரை: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பு படித்தவர்களால் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் வல்லத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் வல்லம் கொட்டாரத் தெருவில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறேன். நான் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் நடத்தும் சித்த மருத்துவ படிப்பில் சான்றிதழ் பெற்றுள்ளேன். அந்த சான்றிதழ் அடிப்படையில் சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறேன். ஆனால் போலீஸார் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்த விடாமல் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தரப்பில், தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்புச் சான்றிதழில், இந்த படிப்பின் அடிப்படையில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழகம் எந்த அடிப்படையில் சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்குகிறது?

சித்த மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் சித்த மருத்துவம் பார்க்க இயலாது என சான்றிதழில் சிறிய எழுத்துகளில் குறிப்பிடிப்பட்டிருப்பதாக கூறுவது, சிகரெட் அட்டையில், புகை பழக்கம் உடல் நலத்துக்கு கேடு என சிறிய அளவில் அச்சிட்டிருப்பதை போன்றது. சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்துக்கும் வித்தியாசம் இல்லையா?

இப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக்குழுவிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஒருவேளை அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் பல்கலைகழகத் துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரைக்க கூடாது? இதுவரை எத்தனை மாணவர்களுக்கு சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பின் கீழ் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது? என்பது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழக பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE