எங்க ஊருக்கு எப்ப ரோடு போடுவீங்க..? - சிறுகாலூர் கிராம மக்கள் கேள்வி

By க.ரமேஷ்

சிதம்பரம் அருகே உள்ளது சிறுகாலூர் கிராமம். இந்தக் கிராமத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்துக்கு அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி உள்ளது. சிறுகாலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பள்ளியில் சென்று படித்து வருகின்றனர்.

சிறுகாலூர் கிராமத்தில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட முக்கிய நகர பகுதி மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு பெருங்காலூர் வழியாகவே செல்ல வேண்டும்.

பெருங்காலூர் மற்றும் சிறுகாலூர் கிராமங்களை இணைக்கும் வகையில், 200 மீட்டர் அளவுக்கு சாலை இல்லாததால் வயல்வெளி வரப்பு பகுதியில் இறங்கி சென்று வருகின்றனர். கோடை காலங்களில் எளிதில் சென்று - வந்து விடுகின்றனர். மழை காலங்களில் சேற்றில் இறங்கி, அவதியுடன் சென்று வரும் நிலை உள்ளது. இந்த வயல் வெளி வரப்புச் சாலையை விட்டால், சுமார் 6 கி.மீ சுற்றி வந்து, பெருங்காலூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “நீண்ட காலமாக இப்பிரச்சினையை கூறி வருகிறோம். இந்த முறையாவது, மழைக்காலம் வருவதற்கு முன்பே இந்த 200 மீட்டர் சாலையை மாவட்ட நிர்வாகம் தார்ச் சாலையாக போட்டு தர வேண்டும்.

மழைக்காலம் வந்துவிட்டால் சுமார் 6 கி.மீ தூரம் சுற்றி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்படும். இதனால் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது” என்று தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் துரித கதியில் இப்பகுதியில் தார்ச் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சிறுகாலூர் மக்களின் எதிர்பார்ப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE