மினி பேருந்துகளின் சேவை... கோவை கிராம மக்களுக்கு தேவை!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாவட்டத்தில் குடியிருப்புகளின் எண்ணிக்கை, முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. நகருக்கு ஈடாக புறநகரப் பகுதிகளிலும் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. முன்பு காலி இடமாகவும், விவசாய நிலமாகவும் காணப்பட்ட இடங்கள் எல்லாம் தற்போது கட்டிடங்களாக மாறியுள்ளன.

மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டியது அவசியம். நகர பேருந்துகள் செல்ல முடியாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும்வகையில், கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மினி பேருந்துகள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வழித்தடங்களுக்கு ‘பெர்மிட்’ பெற்று தனியார் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடக்க காலத்தில் அரசுப் பேருந்துகள் சேவை இல்லாத 17 கிலோ மீட்டர் வழித்தடம், அரசுப் பேருந்துகள் செல்லும் 4 கிலோ மீட்டர் வழித்தடம் என 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

கோவையில் நூற்றுக்கணக்கான மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், காலப் போக்கில் மினி பேருந்துகளின் சேவை குறைந்து விட்டது. உக்கடம் - மைல்கல், உக்கடம் - கோவைப்புதூர், டவுன்ஹால் -வேடபட்டி - பேரூர் வழித்தடம் என குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசின் சட்ட விதிகள், டீசல் விலை உயர்வு, நகரப் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் செல்ல கிலோ மீட்டரை அதிகரிக்காதது, லாபம் தரக்கூடிய அளவுக்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்படாதது, முக்கிய வழித்தடங்களில் மினி பேருந்துகளின் தூரத்தை அதிகப்படுத்தாதது என்பன போன்ற பல்வேறு காரணங்களால் மினி பேருந்துகளின் சேவை குறைந்துவிட்டதாக சமூக செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன் கூறும்போது, “பெரிய அளவில் உள்ள அரசு நகரப் பேருந்துகள் செல்ல முடியாத பகுதிகளில் சென்று மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், தற்போது வெறும் 30 சதவீத மினி பேருந்துகள் மட்டுமே உள்ளன. முன்னரே இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்துகளின் எண்ணிக்கை பல்வேறு வழித்தடங்களில் குறைந்து விட்டது.

எனவே, நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், கூடுதல் எண்ணிக்கையில் மினி பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை மாவட்ட மினி பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் பொருளாளர் எம்.தியாகராஜன் கூறும்போது, “மினி பேருந்து சேவை தொடங்கப்பட்ட சமயத்தில் கோவையில் 150 மினி பேருந்துகள் இருந்தன. திருப்பூர் மாவட்டம் பிரிவுக்கு பின்னர் இதில் 50 குறைந்தது. பின்னர், படிப்படியாக மினி பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தது.

பெர்மிட் பெற்றிருந்தாலும், தற்போது 15-க்கும் குறைவான மினி பேருந்துகளே இயக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மாற்றப்படாமல் உள்ளது. டீசல் விலை உயர்வு, ஊதியம் உயர்வு, கட்டணம் உயர்த்தப்படாதது, வழித்தடங்கள் மாற்றித் தராதது உள்ளிட்ட காரணங்களால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மினி பேருந்துகள் இயக்க தமிழக அரசு தற்போது மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மினி பேருந்துகள் 25 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என அறிவித்துள்ளனர். இதில் 70 சதவீதம் கிராமப்புறங்கள், 30 சதவீதம் நகர்ப்புறங்கள் என கூறியுள்ளனர்.

நாங்கள் கிராமப்புற பகுதிகள், நகரப்புறப் பகுதிகள் என இரண்டு இடங்களுக்கும் சரிபாதி அளவில் தலா 12.5 கிலோ மீட்டர் இயக்க அனுமதி கேட்டுள்ளோம். மேலும், எங்களது கோரிக்கையை மாநில தலைமை மூலமாக தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்’” என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறும்போது, “கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது விளை பொருட்களை நகரப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மினி பேருந்துகள் உபயோகமாக இருந்தன.

தோட்டச் சாலைகள், கரடு முரடான சாலைகளில் இயக்கப்பட்ட இந்த பேருந்துகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். நகரிலும், பெரிய பேருந்துகள் செல்லாத வழித்தடங்களில் வசிக்கும் மக்கள் பேருந்து நிலையங்களுக்கோ, வர்த்தகப் பகுதிகளுக்கோ செல்ல ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே, நகரிலும், கிராமப்புறங்களிலும் தேவையான இடங்களில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அரசு நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து துறையினர் கூறும்போது, ‘“மினி பேருந்துகள் இயக்கம் தொடர்பாக புதிய விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மினி பேருந்துகளுக்கான வழித்தட கிலோ மீட்டர் அதிகரிக்கப்பட்டுள்ளது. மினி பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அதன் உரிமையாளர்களுடன் இம்மாதம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது” என்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்