ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டி பலியிட்ட சம்பவம் ஏற்க முடியாதது: ஐகோர்ட் கண்டனம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆட்டின் கழுத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவப்படத்தை மாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற சம்பவம் ஏற்க முடியாத ஒன்று என உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தார். இதையடுத்து திமுகவினர் சிலர் அண்ணாமலையின் உருவப்படத்தை ஆடு ஒன்றின் கழுத்தில் மாட்டி அந்த ஆட்டை நடுரோட்டில் வெட்டிக் கொன்றனர். பின்னர் ஆட்டின் ரத்தத்தை நடுரோட்டில் தெளித்து அண்ணாமலைக்கு எதிராக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, “இதுபோன்ற கொடூர சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் ஆளுங்கட்சியினருக்கு எதிராக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்டை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போல உருவகப்படுத்தி, அதை நடுரோட்டில் துடிதுடிக்க வெட்டிக் கொன்ற சம்பவம் கிரிமினல் குற்றம் மட்டுமின்றி, விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழும் குற்றம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற செயல்கள் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அண்ணாமலை மட்டுமின்றி எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களையும் இதுபோல கால்நடைகளின் கழுத்தில் மாட்டி வெட்டிக் கொல்வதை அனுமதிக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் ஏற்க முடியாத ஒன்று என கருத்து தெரிவித்து, ஆட்டை நடுரோட்டில் வெட்டிக்கொன்றவர்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE