சினிமா காமெடி பாணியில் கட்டாத தடுப்பணைக்கு பாராட்டு விழா எடுக்கும் பாஜக @ ஈரோடு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: நகைச்சுவை நடிகர் வடிவேலு கிணற்றைக் காணோம் என புகார் அளிப்பது போல், ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் கட்டப்படாத தடுப்பணைக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கூத்தம்பாளையம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சுசிலாவும், துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நடராஜ் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.

தகவல் பெறும் உரிமை சட்டம்: சென்னிமலை ஊராட்சியில் உள்ள அவரக்கரை பள்ளத்தில் மழை நீரைத் தேக்கி வைக்கும் வகையில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ.20.46 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பெருந்துறை பாஜக நிர்வாகிகள், அவரக்கரை பள்ளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு தடுப்பணை கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மனு செய்து கேட்டதற்கும், குறிப்பிட்ட அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டது. அதோடு, 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்த தடுப்பணை கட்டப்பட்டதாகவும், அதற்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் மண் செறிவூட்டப்பட்டதாகவும், அதன்பிற்கு கட்டுமான பொருட்களான சிமென்ட், ஜல்லி வழங்கப்பட்டு, தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டதாகவும் விளக்கமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பணையை புகைப்படம் எடுத்தவர் மற்றும் அதற்கான பெயர் பலகையை எழுதியவர்களுக்கு பில் தொகை வழங்கியது வரை போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு, கணக்கு எழுதப்பட்டு உள்ளதும் தெரியவந்துள்ளது.

பாராட்டு விழா அறிவிப்பு: இது குறித்து பேசிய ஈரோடு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ராயல் சரவணன், “கூத்தம்பாளையம் ஊராட்சி அவரக்கரை பள்ளத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தில், தடுப்பணை கட்டியதாக பொய்யான கணக்குகளைக் காட்டி, ரூ. 20.46 லட்சம் மோசடி நடந்துள்ளது. ஆவணங்களில் உள்ளவாறு அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்படவில்லை. ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், அணை கட்டப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கியுள்ளனர்.

இது குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளோம். இந்த ஊழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறப்பாக தடுப்பணை கட்டிய ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் வரும் 22ம் தேதி பாராட்டு விழா நடந்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அழைப்பிதழ்களை கிராம மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த விழாவுக்கு ஒலிபெருக்கி அனுமதி கோரி சென்னிமலை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளோம்.

மேலும், மத்திய அரசின் நிதியில் முறைகேடு நடந்துள்ளதால், இந்த ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இது குறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்காது என்பதால், மத்திய அரசு விசாரணை கோரி, பிரதமர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். எங்களது குற்றச்சாட்டு மற்றும் பாராட்டு விழா அறிவிப்பைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தடுப்பணையை சற்று தள்ளி கட்டியுள்ளதாக பொய்யான தகவலைத் தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

இது குறித்து சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, “கூத்தம்பாளையம் ஊராட்சியில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து 100 அடி தள்ளி தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையே கட்டப்படவைல்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது” என்றார்.

சினிமாவில், நடிகர் வடிவேலு லஞ்சம் வாங்கிய அதிகாரிகளைக் காட்டிக்கொடுக்க கிணற்றைக் காணோம் என புகார் அளித்து போலீஸாரை சுத்தலில் விடுவார். அதுபோல, பாஜகவினர் செய்துள்ள இந்த நூதன பாராட்டுவிழா அறிவிப்பு பெருந்துறை, சென்னிமலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE