“பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்?” - அண்ணாமலை கேள்வி

By எஸ்.விஜயகுமார்

சேலம்: பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய கல்விக் கொள்கை மிக சிறப்பான திட்டங்களைக் கொண்டது. ஒரு மாநில அரசு அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அதனை ஏற்காமல் விதண்டாவாதம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.

மத்திய அரசு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்குவது குறித்து ஒரு அளவுகோலையும் குறிப்பிட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியங்கள் முட்டை உள்பட சத்தான உணவு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் தயாராக உள்ளது. ஆனால், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல் அதன் பெயரை மாநில கல்விக் கொள்கை என்று மாற்றி, அறிக்கை தயார் செய்து வைத்துக் கொண்டு, அதனை வெளியிடாமல் உள்ளது.

நீட் தேர்வு தேவை என்பது எங்கள் நிலைப்பாடு. நீட் தேர்வு வருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்தும், முதல் தலைமுறை பட்டதாரிகள் எத்தனை பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர் என்பது குறித்தும் விவரங்களை வெளியிட கேட்கிறோம். ஆனால் தமிழக அரசு, இதுவரை விவரங்களை வெளியிடவில்லை. மருத்துவக் கல்லூரிகளில் சேர நடுத்தர ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு தான் உதவி செய்கிறது.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின் இந்த ஆண்டு தான், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் 59 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு என்பது சிறிய அளவில் தான் நடந்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சரணடைந்தவர் ரவுடி திருவேங்கடம். அவர் ஏன் தப்பி ஓட வேண்டும்? அவரை என்கவுன்ட்டர் செய்துள்ளனர். போலீஸார் வெளியிட்டுள்ள குற்றவாளிகள் படம், சிசிடிவி காட்சிகள் போன்றவை அவர்கள் தான் கொலையில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை இவர்கள் ஏன் கொலை செய்தார்கள்? இவர்களை ஏவியது யார்? அரசியல் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? இதையெல்லாம் விசாரிக்கத்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்தில், 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதி பெற்று வந்தனர். இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், அரசு பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

ஆனால், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது, பிஎம் கிசான் திட்டத்தில் நிதி பெறுகின்றனர். விவசாயிகள் மத்திய அரசின் மீது அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் 4,372 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மாநிலம் முழுவதும் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும். டெட் தேர்வு முடித்து ஏராளமான ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களுக்கு, தேர்தல் வாக்குறுதிபடி தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்” என்றார். பேட்டியின் போது பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்