“காவிரி விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது” - அமைச்சர் துரைமுருகன் கருத்து

By வ.செந்தில்குமார்

வேலூர்: “நீண்ட நெடிய காவிரி விவகாரத்தை என்னால் முடிந்த அளவுக்கு நான் கையாண்டு வருகிறேன். காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் இன்று (ஜூலை-15) காலை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள 68 ஊரக அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1,296 மாணவர்கள், 1,244 மாணவியர் என மொத்தம் 2,540 மாணவ - மாணவியர் பயன்பெறுகின்றனர்.

காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள புனித மரிய தெரேசா அரசினர் நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 81 மாணவ - மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 15) காலை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “காமராஜர் படிக்காதவராக இருந்தாலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்ததால் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். அன்றைக்கு காமராஜர், பிள்ளைகள் படிக்க மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். அன்றைக்கு காமராஜருக்கு ஏற்பட்ட ஞானோதயம் போல் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய உள்ளேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரி ஒழுங்காற்று ஆணையம் கர்நாடகா அரசுக்கு தெரிவித்தது தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்பது. ஆனால், ஒரு டிஎம்சி-யைக்கூட தரமாட்டேன் என கர்நாடக அரசு அடம்பிடித்தது. நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் என சொல்கிறார்கள்.

ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்து 574 கன அடி தண்ணீர். கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. கே.ஆர்.எஸ் அணையில் 105 அடி தண்ணீர் உள்ளது. கபினியில் 64 அடி உள்ளது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் இருந்துதான் நமக்கு தண்ணீர் வரவேண்டும். இதுவரை 4,047 கன அடி தண்ணீர்தான் மேட்டூருக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால் ரொம்ப நல்லது. கொடுக்க வேண்டும் எனச் சொன்னாலும் கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வந்து தான் ஆக வேண்டும்.

காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது. என்னால் முடிந்த அளவுக்கு நீண்ட நெடிய காவிரி பிரச்சினையைக் கையாண்டு வருகிறேன். கர்நாடகாவுக்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்துக்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது." என்றார்.

என்கவுன்ட்டர் தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் என்கவுன்ட்டர் தொடர்பாக வேறு எதுவும் தெரிவிக்க முடியாது.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், மாநகராட்சி முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE