“சரணடைந்தவர் ஏன் தப்பிக்க வேண்டும்?” - என்கவுன்ட்டர் விவகாரத்தில் அண்ணாமலை கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: “காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இந்திய அளவில் இதுவரை பார்த்துள்ளோம். சரண்டர் ஆன ஒருவரை என்கவுன்ட்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவசர அவசரமாக என்கவுன்ட்டர் என்ற பெயரில் ஒரு மனிதனுடைய உயிரைப் பறிக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களே காவல்நிலையத்தில் வந்து சரணடைந்தவர்கள். அவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இந்திய அளவில் இதுவரை பார்த்துள்ளோம்.

சரண்டர் ஆன ஒருவரை என்கவுன்ட்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். அடுத்து மிக முக்கியமான கேள்வி, குற்றவாளிக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? விசாரணைக்கு அதிகாலையில் செல்லவேண்டிய காரணம் என்ன? இந்த வழக்கை தமிழக அரசு முறையான திசையில்தான் கொண்டு செல்கிறதா? இதுதான் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது.

தொடர்ந்து உண்மையை மூடி மறைப்பதற்குத்தான் தமிழக அரசு முயல்கிறதே தவிர, இந்த வழக்கில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது குறித்து வாய்திறப்பது இல்லை” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

நடந்தது என்ன? - பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் பொன்னுசாமி நகர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக நேற்று (ஜூலை 14) அதிகாலையில் திருவேங்கடத்தை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்றபோது, திருவேங்கடம் திடீரென தப்பி ஓடினார். வாகனத்தை நிறுத்திவிட்டு, போலீஸார் விரட்டிச் சென்றும் அவரைப் பிடிக்க முடியவில்லை

வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் தகர ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் பதுங்கியிருந்த அவர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீஸாரை நோக்கிச் சுட்டார். பதிலுக்கு போலீஸார் திருப்பிச் சுட்டதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE