அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 முதல் மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி), 2022-ம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டன. அதன்படி பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மை குழுவின் பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்எம்சி குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இந்தக் குழுவுக்கு பெற்றோர் ஒருவர் தலைவராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளராக தலைமை ஆசிரியர் செயல்பட வேண்டும்.

அத்துடன், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், முன்னாள் மாணவர்கள் என மொத்தம் 24 பேர் குழுவில் இடம்பெற்றிருப்பர். அதில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுப்பினர்களை தேர்வு செய்யும் அலுவலராக இருப்பார்.

இதுதவிர, எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தை ஜூலை 28-ம் தேதி நடத்த வேண்டும். இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ் அப், துண்டு பிரசுரங்கள், மாணவர்கள் மூலமாக ஜூலை 26-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். இதையடுத்து, மாநிலம் தழுவிய எஸ்எம்சி மறுகட்டமைப்பு நிகழ்வை அதற்கான அட்டவணையின்படி நடத்த வேண்டும். நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆக.3-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு ஆக.10, 17-ம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆக. 24-ம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE