சுவாமி சிலைகளை உரிய கோயில்களில் ஒப்படைக்க வேண்டும்: ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் உள்ள சுவாமி சிலைகளை, உரிய கோயில்களில் ஒப்படைத்து, வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

அனைத்து ஆன்மிக அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வு தஞ்சாவூரில் நேற்றுநடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சக்திபாபு தலைமைவகித்தார். உதவி ஒருங்கிணைப்பாளர் திருப்பூர் சிவலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பல்வேறு இந்து ஆன்மிக அமைப்புகள், சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள கோயில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதர்மக் காரியங்களில் ஈடுபட்டு, அதிகப்படியான செலவுக் கணக்குகளை காண்பித்து, கோயில்களை லாபம் ஈட்டும் வியாபாரத் தலங்களாக மாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடங்களை முடக்கி, மறைமுகமாக அழித்து, மடங்களுக்குச் சொந்தமான கோயில்களையும், நிலங்களையும் தனதுபிடிக்குள் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. பக்தர்கள் வழங்கும்நிதியைக் கொண்டு நிர்வகிக்கப்படும் கோயில்களில், சிலரின் பிறந்த நாளில் சிறப்பு உணவுவழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது.

பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட, வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த கோயில்களுக்கு வழங்கி, பூஜைகள் நடத்தி, பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகுமீட்கப்பட்டு, தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இவற்றைப் பாதுகாக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பழமையான கோயில்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதற்குரிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து திருடுபோன தொன்மையான சுவாமி சிலைகள், உலகின் பலஇடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன. அவற்றை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE