தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சியமைக்கும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமாகா சார்பில், காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தென்னூரில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. நல்லரசு விரைவில் வல்லரசாக மாறும்.

வலிமையான தமிழகம், வளமான பாரதம் அமைய வேண்டும் என்பதுதான் தமாகாவின் கொள்கை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார். தொடர்ந்து பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியதாவது:

பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அரசியல் மாற்றம் நடக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் ஆட்சி அமைக்க வேண்டும்.

பெரிய பொருளாதார மாநிலமாக தொடர்ந்து 45 ஆண்டுகளாக 2-ம் இடத்தில் இருந்து வந்த தமிழகம், தற்போது மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது. இதேநிலை நீடித்தால் 2029-ம் ஆண்டு 6-ம் இடத்துக்கு சென்றுவிடும்.

தமிழகம், நீர், கல்வி, விவசாயத்தில் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது. ஆட்சி மாற்றத்துக்கான முன்னோட்டமாக இந்தக் கூட்டம்நடக்கிறது. வாரம் ஒரு படம், ஆட்டம்பாட்டம், ஏதாவது ஒரு பிரச்சினை,சாராயம் என மக்களை சிந்திக்கவிடாமல் திமுக பார்த்துக்கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 2026-ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் நாம்அனைவரும் ஒரே மூச்சு, ஒரே உயிர்,ஒரே உடலாக இருந்து சிந்தித்து பணியாற்ற வேண்டும்.

காமராஜர் மக்கள் கட்சித்தலைவர் தமிழருவி மணியன்: ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமிரெட்டி, குமாரசாமி ராஜா, காமராஜர் போன்ற நல்ல தலைவர்கள், ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள் முதல்வர்களாக இருந்து ஆட்சி செய்த நாற்காலியில், இன்று கொள்ளையர்கள் அமர்ந்து ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நல்லவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமெனில், 2026-ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும்.

பாஜக தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி: ஆந்திராவில், சைக்கிள், தாமரை, பவன் கல்யாண் கட்சி இணைந்த ஆட்சி நடக்கிறது. அதேபோல, 2026-ல் தமிழகத்தில் தாமரை, சைக்கிள், மாம்பழம் இணைந்து, காமராஜர் ஆட்சி நடத்தும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: காசுக்காக வாக்களிக்கும் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் உருவாக்கி வைத்ததை எண்ணி, தலைகுனிவு ஏற்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக தோல்வியுற்றாலும், சிறப்பான வாக்குகள் பெற்றுள்ளது. மக்கள் உண்மைக்கு ஆதரவாகஇருப்பதை அது எடுத்துக்காட்டுகிறது. மக்கள் விரும்பும் நேர்மையான, ஊழலற்ற, பூரண மதுவிலக்கு ஆட்சியைத் தர வேண்டும் என்பதே எங்கள் கனவு.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமிழகத்தில் பூரணமதுவிலக்கு அமலில் இருந்தது. கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்,மதுவிலக்கை நீக்கி 3 தலைமுறைகளை நாசமாக்கினார். காமராஜர் நூற்றாண்டு விழாவை காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தப்படியாக பாமகதான் கொண்டாடியது. தமிழகத்தில் லஞ்சம், ஊழல், கொள்ளை பெருகிவிட்டது. தமிழகத்தில் மாற்றம் வேண்டும். மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டிய தருணம் தற்போது உருவாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE