குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை எருவாக பயன்படுத்தி அசத்தல் @ புதுச்சேரி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், திருமண நிலையங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் ஆகியவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 300 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக எந்தவித பலனும் இல்லாமல் ஒரே இடத்தில் ஆண்டுக்கணக்கில் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதன்படி 5 லட்சத்து 53 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் இங்கு குவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரே இடத்தில் குவிக்கப்படும் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. இதனால் காற்று மண்டலம் மாசடைகிறது. மழைகாலங்களில் இந்த குப்பைகள் மக்கி பேட்டரி, மருந்து பொருட்கள், நெயில் பாலிஷ் ஆகியவை மழைநீரில் கலந்து பூமிக்கு அடியில் சென்று தண்ணீர் மாசடைகிறது.

இதனால் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும் அபாய சூழலும் நிலவியது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரியில் பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைமேடுகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து புதுச்சேரி அரசு அறிவியல் முறைப்படி ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சென்னையை சேர்ந்த கிரீன் வாரியர் என்ற நிறுவனம் குருமாம்பேட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம்பிரித்து இயற்கை உரமாக மாற்றும் திட்டத்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு தொடங்கியது.

இதில் பிளாஸ்டிக், கண்ணாடி ஓடுகள், பீங்கான், இரும்பு என மக்காத குப்பைகளையும், உணவு, பழம், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகளையும் பிரிக்கின்றனர். மக்காத பொருட்களை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவிடுகின்றனர்.

மக்கும் பொருட்களை உரமாக்க சில பாக்டீரியாக்களை தெளித்து இயற்கை உரமாக மாற்றி வருகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட 50 டன் அளவுள்ள இந்த இயற்கை உரத்தை புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் விவசாய நிலங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இன்று அனைத்து விவசாயிகளும் அச்சமின்றி பயன்படுத்தும் வகையில் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தனது சொந்த நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கை பயிர்களுக்கு முதன்முறையாக பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பல்வேறு விவசாய பயிர்களுக்கும் இந்த உரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறும்போது,

புதுச்சேரியில் மண்வளம் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாத்திடும் வகையில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், வின்ரோஸ் கம்போசிடிங் என்ற முறையில் பாக்டிரியாக்களை கொண்டு மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த இயற்கை உரத்தை ஒரு தனியார் நிறுவனம் ஆய்வு செய்து, விவசாயத்துக்கு உகந்தது என்று சான்றிதழ் வழங்கி உள்ளது. இதில், நைட்டரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் அடங்கி உள்ளது. முதல் முறையாக 50 டன் உரம் சவுக்கு பயிருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உரத்தை பயன்படுத்தலாமா? என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது. அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோல் நெல், கருப்பு உள்ளிட்ட அனைத்து பயிர்கள், வீட்டு தோட்டம், மாடி தோட்டம், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களுக்கும் இந்த இயற்கை பயன்படுத்தலாம்.

நகரப்பகுதியில் உருவாகும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு கிராமப்புறங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 டன் அளவுக்கு உரம் தயாராகிறது. ரசாயன உரங்களின் விலை அதிகமாக உள்ள நிலையில், குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம். இந்த உரத்தினால் எந்தவித தீங்கும் நிகழாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE