‘‘நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விக்கிரவாண்டி’’ - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: "மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழகத்தின் முதல்வர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன். " என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியை வெற்றியை அடுத்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருக்கிறார்கள்.

திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழக மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது. மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின் தலைவர் என்ற முறையிலும், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால், விக்கிரவாண்டியில் ஓர் இடைத்தேர்தல் என்பதுதான் கொஞ்சமும் எதிர்பாராதது.

புன்னகை மாறாத முகத்துடன் களப்பணியாற்றி வந்த மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் திமுக கூட்டணிக்காகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தார். பொதுக்கூட்ட மேடையிலேயே மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், முழுமையான அளவில் உடல்நிலை தேறாத நிலையில், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அந்த வேதனையுடன்தான் இந்தத் தேர்தல் களத்தை திமுக எதிர்கொண்டது.

விக்கிரவாண்டி மக்களுக்குப் புகழேந்தி செய்த பணிகளைத் தொடரவும், விக்கிரவாண்டி தொகுதி மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்திடவும் அன்னியூர் சிவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொண்டராக பொதுவாழ்வு அனுபவம் பெற்ற அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களைக் காணொலி வாயிலாக நான் கேட்டுக்கொண்டேன்.

திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் பொன்முடி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் இடைத்தேர்தல் களத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைப்புப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றியங்கள் வாரியாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அதிமுக. ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. திமுக வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. விக்கிரவாண்டியில் உள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்து 653 வாக்காளர்களையும் திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

திட்டங்களின் பயன்கள் எல்லாருக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்து, பாகுபாடின்றி அதனைச் செயல்படுத்தி வருகிறோம். இதே விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னபோதும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் தனக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இதுதான் திராவிட மாடல் அரசு. ஒருவர் எந்தக் கட்சிக்காரர் என்று பார்ப்பதில்லை. தமிழக வாக்காளரான அவர், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற அரசுதான் திமுக அரசு.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதைத் தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்கிற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய கலைஞரின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள மகத்தான வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

பட்டியல் இனச் சமுதாயத்திற்கு 18% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வழங்கிய கலைஞரின் வழியில், கடந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது.

இனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெருமிதத்துடன் பெற்றிருக்கிற அன்னியூர் சிவா, கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர் கௌதம் சிகாமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோருடன் அறிவாலயத்தில் என்னை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றிக்காகவா இத்தனை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்று கேட்கலாம். இல்லையில்லை. அந்த ஒரேயொரு தொகுதியில் திமுக அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி, மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், கருணாநிதி மீதும், திமுக மீதும் வைக்கப்பட்ட மலிவான, மட்டமான அவதூறுகள், திமுகவுக்கு எதிராகக் களத்தில் நின்றவர்களும், நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள். இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சிக்கான காரணம்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, களப்பணிகள் தொடங்கிய நிலையில் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதில் ஒவ்வொரு துறை சார்பிலும் மக்களுக்கு நலன் பயக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் தொடங்கி வைத்தேன்.

மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனை சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவுக்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள், விக்கிரவாண்டி வாக்காளர்கள்.

தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்