திருவல்லிக்கேணியில் மாற்றுத் திறனாளியை கேலி செய்து தாக்குதல் - காவல் ஆணையரிடம் புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: திருவல்லிக்கேணியில் மாற்றுத் திறனாளியை கேலி செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். மாற்றுத் திறனாளியான இவர் கடந்த 7-ம் தேதி அண்ணாசாலை சாந்தி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை தாக்கியதாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், ஒருவாரம் ஆகியும் போலீஸார் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல், ரமேஷை தாக்கியவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.கோபிநாத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

பொறியியல் பட்டதாரியான ரமேஷ், கடந்த 7-ம் தேதி அண்ணா சாலை சாந்தி பேருந்து நிறுத்தத்தில் அடையாறு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செல்போனில் பேசியபடி வந்த பெண் ஒருவர், ரமேஷை ஒருமையில் பேசி அவரை தள்ளிவிட்டுள்ளார். மேலும், அவரது உடல் ஊனத்தை குறித்தும் கேலி செய்து உள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஆதரவாக ஆட்டோவில் அங்கு வந்த நபர், ரமேஷை ஆட்டோவில் சிறுது தூரம் கடத்தி சென்று, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கி, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து, ரமேஷ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ரமேஷை தாக்கியவர்களுக்கு ஆதரவாக போலீஸார் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளி களுக்கான உரிமைகள் சட்டத்தின் படி, ரமேஷை தாக்கிய அந்த பெண் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE