நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜூலை 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 17 முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி , மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 16-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் கீழச்செருவையில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென்தமிழககடலோரப் பகுதிகளில் மணிக்கு35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE