விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி: திமுக வேட்பாளர், கூட்டணி தலைவர்கள் கருத்து

By செய்திப்பிரிவு

விழுப்புரம் / சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தேர்தலில் வென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா கூறும்போது, "இது தமிழக முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி. வெற்றிக்குப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கவுதம சிகாமணிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பாமக வேட்பாளர் சி.அன்புமணி உடல்நலக்குறைவு காரணமாக வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரவில்லை. அக்கட்சியின் சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு கூறும்போது, "கடினமான சூழலிலும் பாமக வலுவானப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. அதிமுகவினர் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். எனினும், இந்த தோல்வி நிரந்தரமானது அல்ல" என்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா கூறும்போது, "கடந்த தேர்தலைவிட 2,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளோம். திமுக வெற்றி என்பது பண நாயகத்தின் வெற்றி, ஜனநாயகத்தின் மரணம்" என்றார்.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சமூகநீதிக் கொள்கையை அடகுவைத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். மேலும், நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் ஸ்டாலினின் தலைமை மீது நம்பிக்கை வைத்து, திமுகவுக்கு அமோக வெற்றியை வழங்கிஉள்ளனர்.

திக தலைவர் கி.வீரமணி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி சாதி, மத வெறிக்குக்கிடைத்த மரண அடி இது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் இண்டியா கூட்டணி பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட அவதூறுகள் நொறுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் சாதனைக்கு கிடைத்த வெற்றி இது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: தமிழகத்தில் சாதிய, மத வெறிசக்திகளுக்கு அரசியல் தளத்தில்இடமில்லை என்பதை விக்கிரவாண்டி மக்கள் நிரூபித்துள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: மக்களவைத் தேர்தலில் சாதனை படைத்த இண்டியா கூட்டணிக்கு இந்த வெற்றி மேலும் ஒரு மைல் கல்லாகும்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: மீண்டும் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யும் திமுக தலைவர்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இதேபோல, கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், துரைவைகோ எம்.பி. உள்ளிட்டோரும், வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பணத்துக்கு கிடைத்த வெற்றி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: இடைத்தேர்தல் முடிவு, தமிழக மக்களின் மனநிலை அல்ல. எனினும், மக்களின் முடிவைஏற்றுக்கொள்ள வேண்டும். காலம் மாறும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 33 அமைச்சர்களும், 125-க்கும் மேலான எம்எல்ஏ-க்களும் தொகுதியில் முகாமிட்டு, பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வழங்கி வென்றுள்ளனர். திமுக செலவு செய்த ரூ.250 கோடிக்கு கிடைத்த இந்த வெற்றி, தற்காலிகமானது.ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றது

பாமக தலைவர் அன்புமணி: திமுக சார்பில் ரூ.6 ஆயிரம் பணமாகவும், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன. இது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு. எங்கள் புகார்கள் மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யவில்லை. இதை சட்டரீதியாக சந்திக்க இருக்கிறோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: பணபலம், ஆள்பலம், அதிகார பலத்தால் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியஜனநாயகக் கூட்டணி, இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றதா? கணக்கில்லாத பணம்,உணவு, துணிகளைக் கொடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE