‘அரபு எண்’கள் என நாம் குறிப்பிடுபவை உண்மையில் ‘இந்து எண்கள்’ - உயர் நீதிமன்றம் கருத்து

By கி.மகாராஜன் 


மதுரை: “அரபு எண்கள் என நாம் குறிப்பிடும் எண்கள் உண்மையில் இந்து எண்கள்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலை ரத்து செய்யக் கோரி டி.முத்துராமகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் வாக்களித்து 2 சிண்டிகேட் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 4 பேர் போட்டியிட்டனர். 14 முதலாவது முன்னுரிமை வாக்குகள் பெற்று கோபாலகிருஷ்ணன் என்பவர் வெற்றி பெற்றார். எனக்கும் ரமேஷ் என்பவருக்கும் தலா 8 முன்னுரிமை வாக்குகள் கிடைத்தன. பின்னர் குலுக்கல் முறையில் ரமேஷ் சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

எனக்கு ஆதரவான ஒரு வாக்குச் சீட்டில் அரபி எண்ணுக்கு (2) பதில் ரோமன் எண் (II) குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்த வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. எனவே, சிண்டிகேட் உறுப்பினராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து, தேர்தலில் பதிவான 37 வாக்குகளையும் மீண்டும் எண்ணி சிண்டிகேட் உறுப்பினராக நான் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று விசாரித்தார். பல்கலைக்கழகம் தரப்பில் சிண்டிகேட் தேர்தல் முழுமையாக பல்கலைக்கழக விதிப்படி நடத்தப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “ஒரு தேர்தல் முடிவு வாக்காளர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. அதை சாதாரணமாகவோ, எளிதாகவோ சீர்குலைக்கவோ முடியாது என்பதையும் முதலில் மனதில் வைக்க வேண்டும். இதில் கடுமையான அணுகுமுறை தேவை.

மனுதாரருக்கு உரிய ஒரு வாக்கு அரபு எண்களுக்கு பதில் ரோமன் எண் குறிப்பிடப்பட்டிருந்தால் செல்லாது என அறிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் மூலத்துக்குச் செல்ல விரும்பவில்லை. அதற்காக மொத்த தேர்தலையும் செல்லாது என அறிவிக்க முடியாது. இந்த வழக்கில் வழக்கறிஞர் வாதிடும் போது அரபு எண்கள் எனக் குறிப்பிடப்பட்டது. அந்த எண்கள் உண்மையிலேயே ‘இந்து எண்கள்’ ஆகும். எதிர் தரப்பு வழக்கறிஞர் கவனமாக ‘இந்திய எண்கள்’ எனக் குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேரு அவரது டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில், ‘இந்து எண்கள்’ மற்றும் ‘இந்திய எண்கள்’ பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பி.டாடா எழுதிய இந்து கணித வரலாறு நூலிலும் மற்றும் ஏ சிங்க் ஆகியோர் ‘அரபு எண்கள்’ நமது பழமையான முறைகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ளனர். நமது நினைவுச் சின்னங்களில் ‘இந்து எண்கள்’ மட்டுமே உள்ளன. இந்து என்ற சொல் மதத்துடன் சம்பந்தப்படுத்தப்படுவதால் நேருவுக்கு ஒருவித தயக்கம் இருந்திருக்கலாம்.

பாரதியார் பாப்பா பாட்டில் ‘தேசமில்லா இந்துஸ்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்து என்ற சொல்லை பிராந்திய அர்த்தத்துடன் புரிந்துகொள்ளும் நேரம் இது. டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய, தி இந்து வியூ ஆஃப் லைப்’ என்ற புத்தகத்தில் ‘இந்து’ என்பது முதலில் பிராந்தியத்தை கொண்டிருந்தது. நம்பிக்கையின் முக்கியத்துவத்தை கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சிண்டிகேட் தேர்தல் முடிவு அறிவிப்பில் தலையிட முடியாது. தேர்தல் தொடர்பான கேள்விகள் அனைத்தும் எதிர் மனுதாரர்களுக்கு சாதகமாக இருப்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE