“நீட் தேர்வு வேண்டாம் என பாஜகவிடம் சொல்ல பாமக தயாரா?” - அமைச்சர் பொன்முடி கேள்வி

By செ. ஞானபிரகாஷ்

விழுப்புரம்: “பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம். நீட் தேர்வு வேண்டாம் என பாஜகவிடம் சொல்ல பாமகவினர் தயாராக இருக்கிறார்களா?” என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வென்ற அன்னியூர் சிவாவுக்கு வாழ்த்துகளையும் வாக்காளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு முக்கிய காரணம், தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டம் என தமிழக முதல்வரின் நலத்திட்டங்களால்தான் வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி, இந்தத் தேர்தலில் நாங்கள் இணைந்து பணியாற்றியதற்கு கிடைத்த வெற்றியாகும். புகழேந்தி விட்டுச் சென்ற பணிகளை அன்னியூர் சிவா நிறைவேற்றுவார்” என்றார்.

பணம், பரிசுகளைக் கொடுத்துதான் திமுக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, “ராமதாஸ் நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவார். தற்போது மகனுக்கு அமைச்சர் பதவி வாங்குவதற்காக பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளார். மற்றபடி பாமகவுக்கு கொள்கையெல்லாம் கிடையாது. அவர்கள் சொல்வதை ஏற்கவேண்டியதில்லை. விக்கிரவாண்டியில் பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம். எதிர்க்கட்சிகள் என்பதால் வெல்வோர் மீது குறைசொல்வது வழக்கம். அவர்கள் அவ்வப்போது அணி மாறுவார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்பவர்கள் அதை பாஜகவிடம் சொல்லத் தயாராக இருக்கிறார்களா?” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE