“பாமகவுக்கே விக்கிரவாண்டி வாக்காளர்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில்...” - வழக்கறிஞர் பாலு

By எஸ். நீலவண்ணன்

விக்கிரவாண்டி: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று இல்லவே இல்லை. தமிழக மக்கள் ஒருமுறை பணம் கொடுத்தாலே தாங்க மாட்டார்கள். 3 முறை சராசரியாக ஒவ்வொரு வாக்காளர்களும் தலா ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றதற்கு பாமகதான் காரணம். இதற்காக வாக்காளர்கள் பாமகவுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று சமூகநீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296​​ வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10,602 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 853 வாக்குகள் பதிவானது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, பாமக சார்பில் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு கூறியது: “இத்தேர்தலில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று இல்லவே இல்லை. தமிழக மக்கள் ஒரு முறை பணம் கொடுத்தாலே தாங்க மாட்டார்கள். 3 முறை சராசரியாக ஒவ்வொரு வாக்காளர்களும் தலா ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றதற்கு பாமகதான் காரணம். இதற்காக வாக்காளர்கள் பாமகவுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து அதிமுகவினரும் திமுகவுக்கு வாக்கு செலுத்திவிட்டனரா? என்றால் இல்லை. இது இடைத்தேர்தல். அதிமுகவினர் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தல் மனநிலையிலிருந்து மக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் மாறவில்லை.

இந்த நிலை நிரந்தரமானது இல்லை. இத்தேர்தலை பாமக தைரியமாக எதிர்கொண்டது. இத்தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் பாமகவினர், கூட்டணிக்கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட்டார்கள். பாமக டெபாசிட் தொலையை பெற்றதற்காக பாமகவினரே கொண்டாடி பட்டாசு வெடித்தனர். திமுக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த இடைத்தேர்தலில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதாக கூறி அதை இப்போதுவரை நிறைவேற்றவில்லை,” என்று அவர் கூறினார்.

முதல்வரின் சாதனைக்கு கிடைத்த வெற்றி: இதனிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா கூறும்போது: “திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்கள், மாவட்டப் பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக அவர்களின் பிரச்சாரத்துக்கு ஏற்ப வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த வெற்றி முதல்வரின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE