“பொதுத் தொகுதியில் நின்று உங்களால் வெல்ல முடியுமா?” - திருமாவளவனுக்கு சீமான் சவால்

By ம.மகாராஜன்

சென்னை: “கூட்டணி கோட்பாடு எங்களுக்கு கிடையாது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது,” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், ‘பொதுத் தொகுதியில் நின்று உங்களால் வெல்ல முடியுமா?’ என்று அவர் சவால் விடுத்தார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாகரிக அரசியலை பற்றி அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்க துளியும் தகுதியில்லாத கட்சி திமுக தான். அந்தப் பெயரில் ஒரு சமுகம் இருப்பது எங்களுக்குத் தெரியாது. கிராமங்களில் குறிப்பிட்ட அந்த வார்த்தை இயல்பாக உபயோகப்படுத்தும் வார்த்தை. இந்த வார்த்தையை அடிக்கடி உபயோகபடுத்தியது முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். கம்பராமாயணம், திருமந்திரம் போன்ற சங்க இலக்கியங்களிலும் கூட அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா நாமம் வாழ்க என்று கூறிக்கொண்டு அவருக்கு பட்டை நாமம் சாத்துகின்ற (அந்த சமூகத்தின் பெயரை பயன்படுத்தி) பொறுத்துக்கொள்ள முடியாது என்று கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அதிமுகவை கூறினார். இவ்வளவு காலம் அதை சொல்லும்போது வலிக்கவில்லை. திடீர் என்று ஏன் வலிக்கிறது? திமுகவினர் எங்களை இழிவாகப் பேசும்போது இனிக்கிறது. அதே நாங்கள் பேசிவிட்டால் நெஞ்செல்லாம் புண்ணாகிறது.

அந்த வார்த்தை கஷ்டமாக இருக்கிறது என்றால் தமிழகத்தில் பெயர் மாற்றிக்கொண்ட பிற சமூகங்களைப் போல நீஙகளும் மாறி வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த அமைச்சர்களின் பேச்சு கவுண்டமணி, வடிவேலுவின் நகைச்சுவை போன்றது. முதல்வர் ஏதாவது கூறி இருந்தால் நான் பதில் கூறுகிறேன். நான் பேசியது முதல்வரின் தந்தை குறித்து. மற்றவர்கள் கேள்விக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. மேகேதாட்டு அணையை கட்டியே தீருவேன் என்பதில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் வேறுபாடு இல்லை. காவிரியில் தண்ணீர் தரமாட்டார்கள் என்று‌ தெரிந்தும் திமுகவினர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு சென்று உழைக்கிறீர்கள். திமுக ஏன் காங்கிரஸை தூக்கி சுமக்கிறது? தமிழகத்தில் நடந்த அனைத்துக் கொலைகளும், போதையால் தான் நடந்துள்ளன. தமிழகத்தில் பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என திருமாவளவன் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். பொதுத் தொகுதியில் நின்று உங்களால் ஜெயிக்க முடியுமா? அப்புறம் ஏன் சாதியை குறித்து பேசுகிறீர்கள்? அவரால் திமுகவிடம் பொதுத் தொகுதியை கேட்டு வாங்க முடியவில்லை. கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதனால் திராவிடக் கட்சிகளிடம் என்னால் கூட்டணி வைக்க முடியாது. திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்தால் எனக்கு என்ன அரசியல் இருக்கும்? அவ்வாறு கூட்டணி அமைந்தால் அது மாற்றாக இல்லாமல் ஏமாற்றமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE