விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் தெரியும்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, இத்தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது.

இத்தேர்தலில் 2.37 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 552 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 276 விவிபாட் கருவிகள் ஆகியவை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் 150 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட மொத்தம் 150 பேர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் எஸ்.பி. தீபக் ஸ்வாட்ச் தலைமையில், 4 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 1,219 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் தெரியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE