தமிழ்நாட்டுக்கான நிதியுதவி அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின் புகாருக்கு மத்திய அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் கூறும்போது, “தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் போன்ற முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு மனம் இல்லை’’ என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது:

தமிழக முதல்வரின் கருத்து உண்மைக்கு புறம்பானது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி கணிசமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்கு சராசரியாக ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போதைய ஆட்சியில் 2024-25-ம் பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,331 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 4,985 கி.மீ. ஆக இருந்தது. தற்போது ரூ.6,806 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் விமான போக்குவரத்து தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.4,000 கோடியை ஒதுக்கி உள்ளது. இதில் 2 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. சென்னை விமான நிலையம் ரூ.2,467 கோடியில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் துறைமுக திட்டங்களில் மத்திய அரசு ரூ.10,168 கோடியை முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் வீடுகள் கட்ட ரூ.20,000 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE