திருநெல்வேலி | திருமணங்களை தடுப்பதா? - இளைஞர்கள் கோபம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ளது பொன்னாக்குடி கிராமம். இந்த கிராமம் முழுவதும் நேற்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி பெரும் பேசுபொருளானது.

“இந்த ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே, நீ எத்தனைவருஷம் நல்லா வாழ்ந்திடுவ, உன் பிள்ளைக்கு இந்த மாதிரி வந்தா?நல்லா இருப்பியா நீ” என சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொன்னாக்குடியில் 90-களில் பிறந்த, 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்னமும் திருமணம் ஆகாமல் உள்ளதாக தெரிகிறது. இதன் பின்னணியில் முதியவர் ஒருவர் இருப்பதாக, ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர்.

இளைஞர்கள் சிலர் கூறும்போது “திருமணத்தின் மீது அந்த முதியவருக்கு என்ன வெறுப்பு என்று தெரியவில்லை. ஊருக்குள் யாருக்காவது திருமண பேச்சு எடுத்தாலே, மணமகளின் வீட்டுக்கு மணமகனைப் பற்றி தவறாக சித்தரித்து மொட்டை கடிதம் அனுப்பி, திருமணத்தை நிறுத்திவிடுகிறார்.

இவருக்கு இன்னும் சிலர் உடந்தையாக இருக்கின்றனர். அவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த சுவரொட்டி, அவர்கள் படத்துடன் ஒட்டப்படும்” என்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினரும் தற்போதுவிசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE