ப
ல உயிர்களை பலி வாங்கிய பிறகு, ‘ஸ்டெர்லைட் ஆலையை நடத்த விரும்பவில்லை’ என்று தெரிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், ‘தூத்துக்குடியைவிட்டு வெளியேற மாட்டோம்’ என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது ஆலை தரப்பு. பிரச்சினை ஓய்ந்துவிட்டதா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். கடந்த 22 ஆண்டுகளாக பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பையும் முழுமையாக நம்ப முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எனவே, தூத்துக்குடி மக்கள் தற்போது முன்னெடுத்துவரும் போராட்டங்களை, இதே ஒற்றுமையுடன் சட்ட வடிவப் போராட்டங்களாக மாற்றுவதே பிரச்சினைக்கு தீர்வை தேடித் தரும். முதல்கட்டமாக, தூத்துக்குடியில் இருக்கும் 403 கிராமப் பஞ்சாயத்துகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, ஆலைக்கு எதிராக கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதே ஆலையை நிரந்தரமாக மூட வழிவகுக்கும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசும் ஆலையை நடத்த விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளது. இது ஒருபக்கம் ஆறுதல் தந்தாலும், பன்னாட்டு நிறுவனமான ஸ்டெர்லைட் தனது ஆலையை தொடர்ந்து நடத்த அதிகார வர்க்கம் மற்றும் நீதிமன்றங்கள் வழியாக ஆதிக்கம் செலுத்தும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். அதற்கேற்ப, ‘தங்கள் ஆலை தூத்துக்குடியைவிட்டு வெளியேறாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ராம்நாத். ஏற்கெனவே வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் தனக்கு சாதகமான தீர்ப்புகளையே அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு ஒரே தீர்வாக அவர்கள் கூறுவது கிராமசபை தீர்மானங்களையே.
நீளும் ஸ்டெர்லைட் கரங்கள்
ஆனால், நடந்து முடிந்த சில சம்பவங்களைப் பார்க்கும்போது உள்ளூர் மக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களைவிட கிராமசபைகளில் ஸ்டெர்லைட் நிர்வாகமே ஆதிக்கம் செலுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கிராமசபைக் கூட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பலமுறை முயற்சி நடந்தது. ஆனால், கிராமசபையில் தங்களுக்கு இருக்கும் ஆதரவான தரப்பினரை வைத்தும், மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவாலும் தனக்கு எதிரான தீர்மானங்களை ஆலை நிர்வாகம் முறியடித்தே வருகிறது.
உதாரணத்துக்கு, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த மே 1-ம் தேதி சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநிலம் முழுவதிலும் எதிர்ப்பு இருக்கும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 403 கிராமப் பஞ்சாயத்துகளில் மாப்பிளையூரணி, தெற்கு வீரபாண்டியபுரம், பூவானி, வெள்ளூர் வைகுண்டம் ஆகிய 4 கிராம பஞ்சாயத்துகளில் மட்டுமே ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிந்தது.
அங்குகூட கிராமப் பஞ்சாயத்து செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் கையெழுத்திடவில்லை. இதில் இருந்தே ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அதிகாரக் கரங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் வரை ஊடுருவி இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே, தூத்துக்குடியில் இருக்கும் மொத்த கிராமப் பஞ்சாயத்துகளும் ஒன்றுகூடி ஓரணியில் திரண்டால் ஒரேநாள் தீர்மானம் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிவிட முடியும். இதற்கு நிறைய முன்னுதாரணங்கள் இருக்கின்றன. இதே வேதாந்தா நிறுவனத்தை பழங்குடி மக்கள் மூடவைத்த நிகழ்வும்கூட நடந்திருக்கிறது.
வேதாந்தாவை மூடவைத்த நியாமகிரி
ஒடிசா மாநிலத்தின் ராயகாடா, கலாஹந்தி மாவட்டங்களில் இருக்கிறது நியாமகிரி மலைத் தொடர். அங்கு ‘டங்காரியா கோந்துஸ்’ பழங்குடியினர் சுமார் 8,000 பேர் 105 வன கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்கள் காட்டைக் காக்கும் ‘நியாம் ராஜா’ என்கிற கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதனால், எரிபொருள் தேவைக்காகக்கூட மரத்தை வெட்ட மாட்டார்கள்.
ஒடிசா மட்டுமில்லாமல் ஆந்திராவுக்கும் வளம் சேர்க்கும் வம்சதாரா ஆறு உட்பட நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் நியாமகிரி மலைத் தொடரில் உற்பத்தியாகின்றன. 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இங்கு 150 மில்லியன் டன் பாக்ஸைட் இருப்பது தெரியவந்தது. 2003-ல் கலாஹந்தி மாவட்டத்தில் லஞ்சிகார்க் என்ற இடத்தில் அரசுடன் இணைந்து அலுமினியம் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கு அலுமினியம் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டது. திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் பாக்ஸைட் வெட்டினார்கள். சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் ரசாயன திடக்கழிவான சிவப்பு நிற மண் காடெங்கும் கொட்டப்பட்டது. வம்சதாரா ஆறு மற்றும் 12 வன கிராமங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டன. இதனால் பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. 2005-ல் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு, பாதிப்புகள் உண்மைதான் என்றதுடன் ‘பழங்குடியினர் வசிக்கும் நிலத்தை பழங்குடிகள் அல்லாதவருக்கோ, வேறு எந்த பயன்பாட்டுக்கோ மாற்றி வழங்க இயலாது’ என்று அறிக்கை அளித்தது. ஆனாலும் 2009-ல் தீர்ப்பு மக்களுக்கு எதிராகவே வந்தது. தொடர்ந்து, அடுத்தகட்டமாக 12 கிராமசபைகளும் 2013 ஆகஸ்ட்டில் கிராமசபைகளைக் கூட்டி, வேதாந்தா நிறுவனத்துக்கும், மாநில அரசுக்கும் எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றின. குறிப்பாக, 1996-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் கிராமசபைகளுக்கு அளித்திருக்கும் அதிகாரங்கள், தீர்மானங்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டன. இவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இன்னொரு பக்கம், மக்கள் போராட்டம் தீவிரம் அடையவே, சிறப்பு ஆயுதப்படை சட்டத்தின் கீழ் அடக்குமுறை ஏவப்பட்டது. துணை ராணுவம் குவிக்கப்பட்டது. நக்ஸலைட்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் வனத்தையும், மரங்களையும் சுற்றி வட்ட வடிவில் கைகோத்து நின்று போராடினர். 2016 பிப்ரவரி 27-ம் தேதி நடந்த போராட்டத்தில் ஓர் இளைஞனை சுட்டுக் கொன்றது துணை ராணுவம்.
மீண்டும் 2016 மே மாதம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்திய அரசியலமைப்பின் 73-வது சட்டத் திருத்தங்களின் அடிப்படையில், கிராமசபையின் தீர்மானமே இறுதி முடிவு என்று சொன்ன நீதிபதிகள், ‘மலையில் பாக்ஸைட் வெட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். வேதாந்தா நிறுவனத்தை மூட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். இன்று நியாமகிரியில் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முற்றிலும் இல்லை.
மூடப்பட்ட கோகோ கோலா
கேரள மாநிலம் பிலாச்சிமடாவில் 1998-ல் தொடங்கப்பட்டது கோகோ கோலா நிறுவனம். சுமார் 40 ஏக்கர் பரப்பில் செயல்பட்ட அந்த ஆலை 65 ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் தினமும் 15 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சியது. சுத்திகரிக்கப்படாத ரசாயனக் கழிவுநீர் நிலத்தடியிலும் நீர்நிலைகளிலும் வெளியேற்றப்பட்டது. இதனால், பிலாச்சிமடாவின் பெருமாட்டி பஞ்சாயத்து, ராஜீவ் நகர், மாதவன் நாயர் காலனி, பட்டனமசேரி பஞ்சாயத்து, தொடிச்சிப்பதி காலனி ஆகிய இடங்களில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு வயிற்றுப் புற்றுநோய் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன. குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்தன. அருகில் ஓடிய சித்தூர்புழா ஆறு மற்றும் மீன்காரா, கம்பலத்தாரா, வெங்கலக்காயம் நீர்த்தேக்கங்களும் பாதிக்கப்பட்டு மீன்கள் செத்து மிதந்தன.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிய போராட்டங்கள் தொடங்கி பெரிய போராட்டங்கள் வரை நடந்தன. 2002 ஜூன் மாதம் நடந்த மக்கள் போராட்டத்தை காவல் துறையைக் கொண்டு கடுமையாக ஒடுக்கியது மாநில அரசு. அப்போது நடத்தப்பட்ட தடியடியில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 9 குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்துதான், மயிலம்மா என்பவர் உருவாக்கிய ‘கோகோ கோலா விருத ஜனகீய சமர சமிதி’ (கோகோ கோலாவுக்கு எதிரான மக்கள் போராட்டக் குழு) மற்றும் சமூக செயல்பாட்டாளர்களான ‘வினயோடு’ வேணுகோபால், சி.கே.ஜானு ஆகியோர் சட்டப் போராட்டங்களை கையில் எடுத்தனர். குறிப்பாக இந்திய அரசியல் சாசன சட்டம் அமைத்துக் கொடுத்த கிராமசபைக் கூட்டங்கள் மூலம் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர்.
ஒருகட்டத்தில், பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து உட்பட சுற்றுவட்டார கிராமப் பஞ்சாயத்துகளில், குளிர்பான ஆலைக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். அப்போதும் மாநில அரசு இறங்கி வராததால், உச்ச நீதிமன்றத்தை நாடினர். கிராமசபை அதிகாரத்தை செயல்படுத்தாததைக் கண்டித்த நீதிமன்றம், குளிர்பான நிறுவனத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. 2004-ல் ஆலை நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டது.
இவை மட்டுமல்ல; கோவாவின் கடல் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்த பன்னாட்டு நிறுவனத்தை அந்தப் பகுதியின் கிராமசபை தீர்மானங்களே வெளியேற்றின. தமிழகத்திலேயே, திருவள்ளூர் மாவட்டம், குத்தப்பாக்கத்தில் தமிழக அரசு குப்பைக் கிடங்கு அமைக்க முற்பட்டபோது அங்கு கிராமசபை தீர்மானம் நிறைவேற்றி, சட்டப் போராட்டங்களை நீதிமன்றங்களில் நடத்தி தமிழக அரசையே வெற்றிகண்டது ஒரு சிறு கிராமப் பஞ்சாயத்து.
செய்ய வேண்டியது என்ன?
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீளவிட்டான் கிராமப் பஞ்சாயத்து, வீரபாண்டியபுரம் கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குள் இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. அருகில் இருக்கும் 4 பஞ்சாயத்துகள், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால், முறைப்படி அதில் கையெழுத்திட்டு, ‘மினிட்’ புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டிய அதிகாரிகளும், அதைப் பரிசீலிக்க வேண்டிய மாவட்ட ஆட்சியரும் தங்கள் கடமையைச் செய்ய மறுத்துவிட்டனர்.
தவிர, கிராமசபை கூட்டங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் இயற்றக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மிரட்டல் விடுப்பதாக கடந்த மே 5-ம் தேதி தமிழக தலைமைச் செயலருக்கு புகார் அனுப்பியிருக்கிறது தூத்துக்குடி மாவட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு.
மாவட்ட ஆட்சியர் தற்போது மாற்றப்பட்டிருக்கிறார். ஸ்டெர்லைட்டை மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசும் உறுதியாக அறிவித்துள்ளது. இவை இரண்டுமே தூத்துக்குடி மக்களுக்கும், அங்கு இருக்கும் 403 கிராமசபைகளுக்கும் சாதகமான அம்சங்கள். தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையிலும், மேற்கண்ட கிராமசபைகள், சிறப்பு கிராமசபைக் கூட்டங்களை கூட்டி, ஸ்டெர்லைட் குறித்த தங்களது நிலைப்பாட்டை ஒருமித்த குரலில் எடுத்து, அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். இதை பரிசீலனைக்காக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். அங்கும் இடர்ப்பாடுகள் நேரிட்டால், ஒட்டுமொத்த கிராமசபைகள் சார்பில் தங்களது தீர்மானங்களை முன்வைத்தும் நியாமகிரி, பிலாச்சிமடா உள்ளிட்ட முன்னுதாரங்களை முன்வைத்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். தற்போது களத்தில் இருக்கும் போராட்டக் குழுவினர் இதை முன்னெடுப்பது அவசியம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் அரசியல் கட்சியினரும்கூட இந்த வழிமுறையைக் கையில் எடுக்க வேண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இறுதியாக ஒன்று.. இந்திய அரசியல் சாசன சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு முன்பாக பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு பொருட்டே அல்ல, மக்கள் விருப்பமே வெல்லும்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago