சென்னை: “மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஓர் இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்; முழுக்க முழுக்க அடாவடி சாதிய மனப்பான்மையோடு எழுப்பப்பட்ட முழக்கம் அது,” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் கருணாநிதியை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது அநாகரிகத்தின் உச்சக்கட்டம்; முழுக்க முழுக்க அடாவடி சாதிய மனப்பான்மையோடு எழுப்பப்பட்ட முழக்கம் அது. இதுபோன்று பயன்படுத்தப்படும் சொல்லாடல்களுக்கு பல்வேறு விதமான மோசமான எதிர்க் கருத்துக்களும், விமர்சனங்களும் தொடர்ச் சங்கிலியாக மாறும். மொழியைப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் மத்தியில் சாதிய ஆணவ மேலாதிக்க உணர்வுகளுக்கு தூபமிடுவதும், அதை வளர்த்தெடுப்பதுமையே கொள்கை – கோட்பாடு -பண்பாடாகக் கொண்ட இளைஞர் சமுதாயம் ஒன்று உருவாவது தமிழ் சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும்.
கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பெயரில் மேடை நாகரிகங்கள் அறவே இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதும்; சமூகத்தைச் சீரழித்து வரும் சமூக வலைதளங்கள் எனும் நவீன தளங்களைப் பயன்படுத்தி, நாகரிகம் அடைய வேண்டிய ஒரு சமுதாயத்தைப் பின்னோக்கி தள்ளும் சிலரின் தீய எண்ணங்களும் மேலும் தளைத்திட அனுமதிக்கக் கூடாது. தற்போது நடைபெறுவது சட்டமன்ற இடைத்தேர்தல்; இன்று முதல்வராக இருக்கக் கூடியவர் மு.க.ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன.
அவருக்கும் இடைத்தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. தனது 44 வது வயதில் 1969-ம் ஆண்டில் அவர் தமிழகத்தின் முதல்வராக தமிழகத்தில் முதன்முறையாகப் பதவி ஏற்றவர்; அதற்குப் பிறகு, ஐந்து முறை முதல்வர் பதவியிலிருந்திருக்கிறார். அவருடைய கொள்கைகள் அல்லது செயல்பாடுகளோடு நூற்றுக்கு நூறு எல்லோருக்கும் உடன்பாடு இருந்திருக்காது. தேர்தல் காலங்களில் கூட்டணிக்காக பல கட்சிகள் அவரிடம் நெருங்குவார்கள்; பின் விலகுவார்கள்; இது அவருக்கு மட்டுமே உரித்தானது அல்ல.
1967-ல் அண்ணாவின் தலைமையில் ஏழு கட்சி கூட்டணி உருவாகி, தேர்தல் முடிந்த பின் கூட்டணியில் அங்கம் பெற்ற பல கட்சிகள் எதிர்நிலை எடுத்தனர். 1967-ல் யாரை வீழ்த்தினார்களோ, நான்காண்டு கழித்து 1971-ல் அவர்களுடனே கூட்டணி சேரும் நிலை உருவாகிற்று. தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியா முழுக்க இதேபோன்ற அரசியல் நிலைப்பாடுதான் நிலவுகிறது.கொள்கை, கோட்பாடு, செயல்பாடுகளில் அவரோடு முரண்பட்டுக் கொண்டே பயணித்தவர்களும் உண்டு; எதிர்த்து வெளியேறியவர்களும் உண்டு. அவருடைய எல்லா கருத்துகளிலும், எல்லோராலும், எல்லா காலகட்டங்களிலும் உடன்படவும் முடியாது; முரண்படவும் முடியாது.
அவருடன் ஒத்துப் போகக் கூடிய கொள்கை, கோட்பாடுகளும் உண்டு; சிறிதும் ஒத்துப்போக முடியாத பல்வேறு அம்சங்களும் உண்டு. ஜனநாயகத்தில் இதுவே எதார்த்தமாக இருக்கிறது. அவர் பல அபார தனித் திறமைகள் கொண்ட அபூர்வ அரசியல்வாதி. கண்மூடி கண் திறப்பதற்குள் பலரையும் ஒன்றும் சேர்ப்பார்; பிரிக்கவும் செய்வார். இது அவரிடம் இருந்த பலரை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் தனித்திறமை ஆகும். அவரோடு பழகுகின்ற காலத்தில் ஒரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு ஒத்துப்போவார்; இன்னொரு விஷயத்தில் நூற்றுக்கு நூறு எதிர்நிலை எடுப்பார்.
இந்த திறமைகளால் தான், அற்ப சொற்ப எண்ணிக்கையில் உள்ள ஒரு சமுதாயத்தில் அதுவும் ஒரு குக்கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் தமிழகத்தில் அவரால் அரசியல் செய்ய முடிந்தது; ஆட்சியில் இருக்க முடிந்தது. நமக்கு மாணவப் பருவத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த பல்வேறு தருணங்கள் உண்டு. அவரோடு பயணித்த காலங்கள் இனிமையானதாகவும் இருந்திருக்கிறது; மிக மிக கசப்பானதாகவும் இருந்திருக்கிறது. சமூக, அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டு நெருங்கியும் இருந்திருப்போம்; வெகு தூரம் விலகியும் சென்றிருப்போம். சட்டமன்றத்துக்கு உள்ளேயே ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து மோதல்கள் கூட நடைபெற்றது உண்டு.
ஜனநாயகத்தில் பொதுவாழ்வில் இந்த இரண்டுமே சம கூறானவை. இரண்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிக்கும் போது அல்லது ஒன்றின் தலைமையில் இன்னொன்று செயல்படுகின்ற பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்வதும், பிரிய நேரிடுகின்ற பொழுது கருத்தியல் ரீதியாகத் தாக்கிக் கொள்வது உலக அளவிலும் உண்டு. இந்தியாவில் அதிக அளவிலும் உண்டு; அதிலும் தமிழகத்தில் மிக மிக அதிக அளவில் உண்டு. கடந்த 40 ஆண்டுகளில் குறிப்பிட்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் அரசியல் மேடைகளை அரைமணி நேரம் கூட நின்று பார்க்க முடியாது. கேளிக்கைப்படுத்துவது என்ற பெயரில் ஆபாசமும் அருவருப்பும் மட்டுமே மிஞ்சி நிற்கும். இடைப்பட்ட காலத்தில் அவைகளுக்கு விடை கொடுக்கப்பட்டன.
1996-க்கு பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் ஓரளவுக்கு மேடைப் பேச்சுக்கள், விமர்சனங்கள் நாகரீகமாகவே அமைந்தன. அண்மைக்காலமாக இன்றைய ஆளுங்கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளின் மேடைகள் பொது இலக்கணங்களிலிருந்து விலகி, தமிழ் சமுதாயத்தை மீண்டும் ஒரு தவறான பாதைக்கு கொண்டு செல்லும் தவறான முன்னுதாரணங்களை அரங்கேற்றி வருகின்றன. பல நேரங்களில் ஆளுங்கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வழக்கறிஞர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட சாதி ரீதியான சமூகங்களைக் குறிப்பிட்டு ஒப்பிடக்கூடிய போக்குகள் அதிகரித்து வந்துள்ளன.
மூன்றாம் தர, நான்காம் தரப் பேச்சாளர்கள் தொலைக்காட்சி ஊடகங்களில் வரம்பு மீறிப் பேசிய உதாரணங்களும் உண்டு. ஆனால், அவையெல்லாம் அவ்வப்போது உயர் பொறுப்பில் இருக்கக்கூடியவர்களால் கண்டிக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் என்றோ ஒரு நாகரிகமான சூழ்நிலைகள் உருவாயிருக்கும்.அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் பல பேருடைய பேச்சுக்கள் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்கக் கூடியதாகவும் ஆத்திரமூட்டக்கூடியதாகவும் பெரும் கலவரங்களையே உருவாக்கக் கூடியதாகவும் இருந்திருக்கின்றன. குறிப்பாக YouTube, FaceBook, X தளம் போன்ற தொழில் நுட்பங்கள் மிக மிக மோசமானவர்களின் கைகளுக்கு சென்று விட்டன.
பல்வேறு முகவரிகளிலிருந்து தங்களது முகங்களை வெளிப்படுத்தாமல் அநாகரிகமான கருத்துக்களை உமிழும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இன்னும் பல பேர் ரூபாய் 200-க்கும் 300-க்கும் கூலிக்காகக் கூட சில அமைப்புக்கள், அரசியல் கட்சிகளினுடைய ஏவல்களாக செயல்படுகின்றனர். சமூக வலைதளங்கள் இப்பொழுது இரு பக்கமும் கூர்மையடைந்த ஆயுதங்களைப் போல் ஆகிவிட்டது. தங்களுடைய முகங்களையும் முகவரிகளையும் மறைத்துக் கொண்டு சாதிய, மத ரீதியான வன்மத்தோடு கருத்துக்களைப் பதிவிடுவதை ‘கருத்துரிமை’ என்ற பெயரில் கலாச்சாரமாக்க முற்படுகிறார்கள்; அவர்களே ஒரு இயக்கமாகவும் திரளுகிறார்கள்.
அவர்களுக்கோ, இந்த மண்ணுக்கோ, மொழிக்கோ எவ்வித உண்மையான பந்தமும் பற்றும் கிடையாது. இது போன்ற தான்தோன்றித்தனமாக ‘கருத்துச் சுதந்திரம்’ என்ற பெயரில் தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியவர்களுடைய நடவடிக்கைகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நல்லதும் நடந்திருக்கிறது; மோசமான சம்பவங்களும் நடந்து இருக்கிறது. அவருடைய பங்களிப்பு தமிழுக்கோ தமிழ் சமுதாயத்துக்கோ எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது.
ஆட்சியாளராக இருந்தபோது அவருடைய அரசியல் நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. அதேபோன்று அவருடைய ஆட்சிக் காலத்தில் நடந்த பல்வேறு சாதகமான நடவடிக்கைகளையும் குறிப்பிட்டால் மட்டுமே அவருடைய ஆட்சிக்கால குறைபாடுகளை அரசியல் ரீதியாக விமர்சிப்பதற்கு உண்டான அருகதையும் தகுதியும் பெற முடியும். தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடைய பிரச்சினைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அது குறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலே இருந்தது. அதனால் தான் சாதி வெறியும் மத வெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப் போய் இருக்கக்கூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலிருந்திருக்கிறார்; 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார்.
அவருடைய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு எத்தனையோ தளங்கள் உண்டு; எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்குப் பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவோ புனையப்பட்ட அவதூறுப் பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரைக் கொச்சைப்படுத்திட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் பொழுது, அதை நாகரீகமாக, சட்டப் பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக “அதே வார்த்தையைத் திரும்பச் சொல்லி முடிந்தால் நடவடிக்கை எடுத்துப் பார்” என்று சொல்வதெல்லாம் அரசியலாகத் தெரியவில்லை; சாதிய ஆணவத்தின் இன்னொரு வடிவமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.
ஒருவர் மறைந்து விட்டால் அவரை விமர்சனம் செய்யக்கூடாதோ என்ற கேள்வியோ, அதற்கான அனுதாபமோ காட்ட வேண்டும் என்பதில்லை. அதேசமயம் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அந்த பாடல் வரிகளின் பொருள்; பாடியவர்களின் தொனி; அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை; அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம்; கடந்து செல்லக் கூடியவர்கள் கடந்து செல்லலாம்; ஆனால், நியாயப்படுத்த மட்டும் முயல்வது, நியாயமாகாது,” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago