நியோ மேக்ஸ் மோசடி வழக்கை 15 மாதத்தில் முடிக்க பொருளாதார குற்றப் பிரிவுக்கு ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கின் விசாரணையை 15 மாதத்தில் முடித்து சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை தலைமையாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனம் நியோ மேக்ஸ். இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் 3 ஆண்டில் இரட்டிப்பாக பணம் தருவதாகவும், பணத்துக்கு ஈடாக வீட்டடி மனை தருவதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி, நியோ மேக்ஸ் நிறுவனத்தில் லட்சக் கணக்கானவர்கள் முதலீடு செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவில் பணம் மோசடி செய்தனர்.

பின்னர் முதலீட்டாளர்களுக்கு கூறியபடி பணம், வட்டி, நிலம் கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது.இதையடுத்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து நியோ மேக்ஸ் இயக்குநர்கள் கபில், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி என பலரை கைது செய்தனர். இவர்கள் டான்பிட் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி தண்டபாணி இன்று பிறப்பித்த உத்தரவு: நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி 3.6 லட்சம் பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதில் 11,179 பேர் மட்டுமே முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். இதில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. ரூ.850 கோடி சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். முதலீடு செய்தவர்களின் விவரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக கண்டறியும் வகையில் மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் வகையில் ஊடகங்களில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். விளம்பரம் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 8 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரிடமும் புகார் பெற்று விசாரணையை 15 மாதத்தில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்தவர்களின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் பெயரிலுள்ள செத்துக்களை கண்டறிந்து அவற்றை முழுமையாக வழக்கில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சொத்துக்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உரிமை பெற்று விற்பனை அல்லது ஏலம் விட்டு அப்பணத்தை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE